மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டவர்களுக்கு தொல்லை: கருத்து சுதந்திரத்தை நசுக்க கூட்டணி அரசு முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு

மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டவர்களுக்கு தொல்லை கொடுத்த விஷயத்தில் கருத்து சுதந்திரத்தை நசுக்க கூட்டணி அரசு முயற்சி செய்வதாக பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.
மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டவர்களுக்கு தொல்லை: கருத்து சுதந்திரத்தை நசுக்க கூட்டணி அரசு முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு,

பா.ஜனதாவை சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ராகுல் காந்தி வருகையின்போது, கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் சிலர் மோடிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் அழைத்துச் சென்று செல்போன்களை பறித்தது வெட்கக்கேடானது. நாட்டில் அனைவருக்கும் கருத்துகளை தெரிவிக்கும் சுதந்திரம் உள்ளது. கருத்து சுதந்திரத்தை நசுக்க கூட்டணி அரசு முயற்சி செய்கிறது.

கோஷம் எழுப்பியவர்கள் பா.ஜனதாவினர் கிடையாது. அவர்கள் பொதுமக்கள். மோடிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதை, காங்கிரசாரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்த சாப்ட்வேர் என்ஜினீயர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மிரட்டியது கண்டிக்கத்தக்கது ஆகும்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனருக்கு புகார் அளிப்போம். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்குவோம். மோடியை கொலை செய்வதாக காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பேளூர் கோபாலகிருஷ்ணா கூறினார். மோடிக்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அவர்கள் மீது இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்களை போலீசார் அழைத்து சென்று தொல்லை கொடுத்தனர். இது தான் காங்கிரஸ் கலாசாரம். இந்திரா உணவகத்தில் 200 பேர் சாப்பிட்டால், 2,000 பேர் உணவு சாப்பிட்டதாக கணக்கு எழுதி, முறைகேடு செய்கிறார்கள்.

தேர்தல் செலவுக்காக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். சித்தராமையா ஆட்சி காலத்தில் 10 சதவீத கமிஷன் நடைமுறையில் இருந்தது. கூட்டணி ஆட்சி வந்த பிறகு அது 20 சதவீதமாக உயர்ந்துவிட்டது. கமிஷன் பிரிப்பதிலும் சமூக நீதியை பின்பற்றுகிறார்கள். இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

இந்த பேட்டியின்போது, முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் உடன் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com