கோவை: இரவில் தங்கி செல்லும் விமானங்களின் பெட்ரோலுக்கு வரிச்சலுகை அளிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது

கோவையில், இரவில் தங்கி மறுநாள் புறப்பட்டு செல்லும் விமானங் களுக்கு பெட்ரோலுக்கு வரிச்சலுகை அளிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது.
கோவை: இரவில் தங்கி செல்லும் விமானங்களின் பெட்ரோலுக்கு வரிச்சலுகை அளிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது
Published on

கோவை,

கோவை விமான நிலையத்தில் இரவில் தங்கி மறுநாள் அதிகாலையில் புறப்பட்டு செல்லும் விமானங்களுக்கு பெட்ரோலுக்கு மாநில அரசு விதிக்கும் வாட் வரிச்சலுகை அளிக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், கோவை விமான நிலையத்தில் இரவில் தங்கி செல்லும் விமானங்களுக்கு நிரப்பப்படும் பெட்ரோலுக்கு மதிப்பு கூட்டிய வரி (வாட்) 29 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு கடந்த 15-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கோவை விமான நிலையத்தில் இரவில் தங்கி மறுநாள் புறப்பட்டு செல்லும் விமானத்துக்கு ஒரு முறை பெட்ரோல் நிரப்பினால் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை மிச்சமாகும்.

இதுகுறித்து கோவை விமான நிலைய இயக்குனர் மகாலிங்கம் கூறியதாவது:-

தமிழக அரசின் வரிச்சலுகையின் மூலம் கோவைக்கு கூடுதல் விமானங்கள் வர வாய்ப்பு உள்ளது. கோவை விமான நிலையத்தில் இரவில் விமானங்கள் தங்குவதால் அவை பழுது பார்க்கப்படும். மேலும் விமானங்கள் சுத்தப்படுத்தப்படும். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும் வர்த்தகர்கள், மாணவர்கள், சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு கோவையில் இரவில் தங்கி செல்லும் விமானங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதற்கு முன்பு கோவையில் இருந்து சென்னை செல்ல காலை 9 மணி வரை விமானம் கிடையாது.

சென்னையில் இருந்து வரும் விமானம் கோவை வந்து அது திரும்பி சென்னை செல்லும்போது தான் பயணம் செய்ய வேண்டி இருந்தது. பெட்ரோலுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு உள்ளதால் 150 பயணிகள் கொண்ட விமானத்தில் ஒரு பயணியின் டிக்கெட் கட்டணம் ரூ.300 வரை குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com