வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து காணொலி காட்சி மூலம் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து காணொலி காட்சி மூலம் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து காணொலி காட்சி மூலம் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
Published on

கடலூர்,

வடகிழக்கு பருவமழையையொட்டி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, நேற்று அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசுகையில், பருவமழை காலங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை எந்தவொரு பாதிப்பும் இல்லாமல், பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கும், தண்ணீர் தேங்காத வகையில் உடனுக்குடன் பம்புசெட்டுகள், ஜெனரேட்டர் மூலம் வெளியேற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பேரிடர் பாதிக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து, அங்கு போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதையும் மீறி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால், பேரிடர் மேலாண்மை பிரிவில் செயல்பட்டு வரும் 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவும்.

இதுதவிர மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் போதுமான அளவு இருப்பு வைக்கவும், அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை பாலங்கள், சாலைகள் சேதமடைந்தால், உடனே சரிசெய்யவும், சாலையில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவதற்கும் போதுமான கருவிகளை தயார் நிலையில் வைக்கவும், மருத்துவமனையில் போதுமான மருந்து வசதிகளும், அவசர தேவைகளுக்கு மருத்துவ குழு அமைத்து தயார் நிலையில் இருக்கவும், குடிநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தி நோய் பரவா வண்ணம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், உணவு, தானிங்கள் தேவையான அளவு இருப்பு வைக்கவும் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீச்சல் வீரர்கள் பைபர் படகுகளை தயார் நிலையில் வைக்கவும், மின் மாற்றிகளை நல்ல நிலையில் வைத்திருக்கவும், சீரான மின்சாரம் வழங்கவும், மின் கம்பிகளுக்கு மேல்பகுதியில் செல்லும் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பருவமழை காலங்களில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com