முத்தையாபுரம்- எட்டயபுரத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்; புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தல்

முத்தையாபுரம், எட்டயபுரத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் செய்தபோது எடுத்தபடம்
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் செய்தபோது எடுத்தபடம்
Published on

முத்தையாபுரம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புறநகர் குழு சார்பில் நேற்று காலை தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்திற்கு புறநகர் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் பூமயில், புறநகர் குழு உறுப்பினர்கள் முருகன், சுப்பையா, முனியசாமி, கிளை செயலாளர்கள் வன்னிய ராஜா, பாஸ்கர், ரூபஸ், மாதர் சங்க புறநகர் செயலாளர் சரஸ்வதி, ஜெயசித்ரா, செல்வி, பார்வதி, வாலிபர் சங்கம் ஆனந்த், ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கோவில்பட்டி-எட்டயபுரம்

எட்டயபுரம் பஸ்நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், எட்டயபுரம் நகர செயலாளர் சேர்விஸ், கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 36 பேரை எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான போலீசார் கைது செய்து பஸ்நிலையம் அருகே

உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக கோவில்பட்டி பஸ் நிலையம் அருகில் கம்யூனிஸ்டு விவசாய சங்கத்தினர் பிரதமரின் உருவபொம்மை எரிக்கும் போராட்டத்திற்கு புறப்பட்டு வந்தனர். அவர்களை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன் தலைமையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குருசந்திர வடிவேல், ஆர்தர் ஜஸ்டின் ஆகியோர் தடுத்து நிறுத்தினார்கள். உருவபொம்மையை எரிக்க முயன்ற ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணைத்தலைவர் தமிழரசனிடம் இருந்து உருவ பொம்மையை பறித்தார்கள். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com