மதுரை, விருதுநகர், சிவகங்கையில் என்ஜினீயர், கல்லூரி மாணவி உள்பட 5 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் என்ஜினீயர், கல்லூரி மாணவி உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
மதுரை, விருதுநகர், சிவகங்கையில் என்ஜினீயர், கல்லூரி மாணவி உள்பட 5 பேருக்கு கொரோனா உறுதி
Published on

மதுரை,

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதுபோல் ஏற்கனவே பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு அறையில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 2 பேரும் மதுரை திருமங்கலம், கொட்டாம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள். 2 பேரில் ஒருவர் 53 வயது ஆண். மற்றொருவர் 40 வயது பெண்.

இவர்கள் 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபோல் இவர்களுடைய உறவினர்கள், குடும்பத்தினர் சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே திருமங்கலத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் திருமங்கலத்தில் மட்டும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் சிகிச்சை பெற்று ஏற்கனவே 16 பேர் முற்றிலும் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இதுபோல் மதுரை எழுமலை பகுதியை சேர்ந்த 3 பேர் நேற்று தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா நோய் குணமடைந்ததை தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் இவர்கள் 15 நாட்கள் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும், அவர்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் குணமடைந்து வீட்டுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாணவி-என்ஜினீயர்

விருதுநகர் மாவட்டம் முழுவதும் 689 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டு அவர்கள் மதுரையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 489 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள டி.சேடப்பட்டி கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் கினி நாட்டில் இருந்து ஊர் திரும்பிய நிலையில் அவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தார். 28 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த அவருக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதே போன்று குமாரபுரத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து காய்ச்சல் மற்றும் இருமல் இருந்து வந்ததால் கன்னிசேரிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறையினர் இவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள டி.சேடப்பட்டி கிராமம், குமாரபுரம் கிராமம் ஆகியவற்றை சீல் வைத்து சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த இரு கிராமங்களிலும் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி விருதுநகர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பழனிசாமி தெரிவித்ததாவது, கொரோனா தொற்று கண்டறியப்பட்ட என்ஜினீயர் குடும்பத்தினருக்கும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவி வெளி மாநிலங்களுக்கு செல்லாத நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் படித்த கல்லூரியில் விடுதி அறையில் உடன் ராஜபாளையத்தை சேர்ந்த 2 மாணவிகள் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியின் குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். தற்போதைய நிலையில் அவர்கள் இருவரும் உடல் நிலை சீராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிவகங்கையில் மேலும் ஒருவர்

கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் 11 பேர் சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 4 பேர் குணமடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதம் உள்ள 7 பேர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த திருப்பத்தூரை சேர்ந்த 50 வயது நபருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து அவர் சிவகங்கை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com