ஊரடங்கால் தொழில் முடக்கம் முகக்கவசம், காய்கறி விற்பனையில் ஈடுபடும் தினக்கூலி தொழிலாளர்கள்

ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடங்கி விட்டதால் வருமானம் இழந்த தினக்கூலி தொழிலாளர்கள் முகக்கவசம், காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஊரடங்கால் தொழில் முடக்கம் முகக்கவசம், காய்கறி விற்பனையில் ஈடுபடும் தினக்கூலி தொழிலாளர்கள்
Published on

கோவை,

கட்டிட வேலை, தச்சு வேலை, சிற்ப வேலை, வர்ணம் பூசும் வேலை, மின்சாதனங்களை பழுது நீக்கும் வேலை, தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்யும் வேலை உள்பட பல்வேறு வேலைகளில் அன்றாடம் ஈடுபட்டு தினசரி தேவைகளை மட்டுமே நிறைவேற்றி வந்த அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வை கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தலைகீழாக புரட்டி போட்டு விட்டது.

இந்த நிலையில் காய்கறி விற்பது, பால் விற்பது, மளிகை பொருட்களை வீடு, வீடாக சென்று கொடுப்பது உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கான வேலைகளுக்கு திடீரென மவுசு அதிகரித்து காணப்படுகிறது. கட்டுமான தொழிலாளர்கள், பெயிண்டர்கள், ஓட்டல் தொழிலாளர்கள், தள்ளுவண்டிக்கடைக்காரர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் தற்போது முகக்கவசம் மற்றும் காய்கறி விற்பனையாளர்களாக மாறி விட்டனர்.

முகக்கவச வியாபாரம்

தற்போது பொதுமக்கள் வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிந்தவாறு செல்ல வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தவாறு சென்று வருகின்றனர். இதனால் முகக்கவசத்தின் தேவை அதிகரித்து உள்ளது. தையல் தொழிலாளர்கள் பலர் தாங்களாகவே வீட்டில் துணி மூலம் முகக்கவசத்தை தயாரித்து தெருத்தெருவாக சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

கோவை ரெயில்நிலையம் அருகே தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்த தொழிலாளி ஒருவர் கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு கைகளில் கட்டுக்கட்டாக முகக்கவசங்களை விற்பனைக்காக வைத்து இருந்தார். இதனை பொதுமக்கள் வாங்கிச்செல்கிறார்கள்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தள்ளுவண்டி கடையில் இட்லி, சப்பாத்தி உள்ளிட்ட உணவு வைத்து தொழில் செய்து வந்தேன். அதில் தினசரி கிடைக்கும் வருமானம்தான் எனது குடும்ப தேவையை பூர்த்தி செய்து வந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக எனது தொழில் முற்றிலும் முடங்கி விட்டது.

சொற்ப வருமானம்

வருமானத்துக்கு வழியில்லை. ஆனால் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக முகக்கவசம் விற்பனையில் ஈடுபட்டுள்ளேன். ஒரு முகக்கவசம் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்கிறேன். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.300 வரை வருமானம் கிடைக்கிறது. அதுவே தள்ளுவண்டி கடையில் இருந்தால் ரூ.1000 முதல் ரூ.1500 வரை வருவாய் கிடைக்கும். திருடாமல், அடுத்தவரிடம் கையேந்தாமல் சொற்ப வருமானம் என்றாலும் உழைத்து சம்பாதிக்கிறேன் என்றார்.

இதேபோல் காய்கறி வியாபாரத்துக்கு தடை இல்லை என்பதால் ஊரடங்கு கால செலவை சமாளிக்க கோவையில் ஆட்டோ டிரைவர்கள், கட்டிட தொழிலாளர்கள் என பல்வேறு தினக்கூலி தொழிலாளர்கள் காய்கறி விற்பனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com