சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: டி.கே.சிவக்குமார் டெல்லி கோர்ட்டில் இன்று ஆஜர் ஜாமீன் கிடைக்குமா?

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.கே.சிவக்குமார் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: டி.கே.சிவக்குமார் டெல்லி கோர்ட்டில் இன்று ஆஜர் ஜாமீன் கிடைக்குமா?
Published on

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டவருமான டி.கே.சிவக்குமார் வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது டெல்லி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது.

இதுகுறித்து அமலாக்கத்துறையினர், டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்ய கோரிய அவரது மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் ஆஜரானார்.

அவரிடம் 4 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 4-வது நாள் விசாரணையின் முடிவில், அதாவது கடந்த 3-ந் தேதி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். டெல்லி கோர்ட்டு முதலில் டி.கே.சிவக்குமாருக்கு 9 நாட்கள் போலீஸ் காவல் வழங்கியது. கடந்த 13-ந் தேதி டெல்லி கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு போலீஸ் காவலை மேலும் 4 நாட்கள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப் பட்டுள்ள போலீஸ் காவல் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. இதையடுத்து இன்று மாலை அவர் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இந்த 4 நாட்கள் போலீஸ் காவலில், 2 நாட்கள் உடல்நலக்குறைவு காரணமாக டி.கே.சிவக் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த முடியவில்லை.

அமலாக்கத்துறையினர் இதை காரணம் காட்டி, போலீஸ் காவலை நீட்டிக்குமாறு கோர்ட்டில் வக்கீல் மூலம் வலியுறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது. அதனால் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் இடையே எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com