டெல்லி வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கிய விவகாரம்: டி.கே.சிவக்குமாரிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை இரவு வரை நடந்தது

டெல்லியில் உள்ள வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கிய விவகாரம் தொடர்பாக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் 2-வது நாளாக நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை நேற்று இரவு வரை நடந்தது.
டெல்லி வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கிய விவகாரம்: டி.கே.சிவக்குமாரிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை இரவு வரை நடந்தது
Published on

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிக்கிய ரூ.8.50 கோடி குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரியும், அமலாக்கத்துறையில் பதிவான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும் கர்நாடக ஐகோர்ட்டில் டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது. இதனால் டி.கே.சிவக்குமார் எந்த நேரத்திலும் கைது செய்யப் படலாம் என்ற தகவல் வெளியானது.

இதற்கிடையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அதிகாரிகள் மீண்டும் சம்மன் வழங்கினார்கள். இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். அவரிடம் நேற்று முன்தினம் இரவு 11.45 மணிவரை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். நேற்று முன்தினம் மட்டும் 70 கேள்விகளை டி.கே.சிவக்குமாரிடம் அதிகாரிகள் கேட்டு இருந்தனர். அந்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருந்தார். இந்த நிலையில், நேற்று 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

அதன்படி, நேற்று காலை 11 மணியளவில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு டி.கே.சிவக்குமார் வந்தார். அவருடன் வக்கீல்களும் வந்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு வைத்து வக்கீல்களுடன் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிகாரிகள் கேட்கும் கேள்விகள், அவற்றுக்கு எவ்வாறு பதில் அளிப்பது என்பது குறித்து வக்கீல்களுடன், டி.கே.சிவக்குமார் கேட்டறிந்தார். பின்னர் அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் ஆஜரானார். முன்னதாக டி.கே.சிவக்குமார் நிருபர் களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நான் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, விசாரணைக்கு ஆஜரானேன். அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த விசாரணைக்கு எதற்காக பயப்பட வேண்டும். நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

சட்டத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஒரு வாரம் அல்ல, ஒரு மாதம் விசாரணை நடத்தினாலும், நான் விசாரணைக்கு ஆஜராவேன். இன்றே (அதாவது நேற்று) விசாரணை முடியுமா? என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

இதற்கிடையில், விசாரணைக்கு ஆஜரான டி.கே.சிவக்குமாரிடம் டெல்லியில் உள்ள ரூ.8.50 கோடி சிக்கியது குறித்தும், பினாமி பெயரில் சொத்து சேர்த் திருப்பது தொடர்பாகவும், பிற பண பரிமாற்றங்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. பின்னர் மதியம் 2.15 மணியளவில் சாப்பிடுவதற்காக டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்து அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் மதிய உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் விசாரணைக்கு ஆஜரானார். அதைத்தொடர்ந்து விசாரணையை தொடங்கிய அதிகாரிகள் டி.கே.சிவக்குமாரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதாக தெரிகிறது.

இந்த விசாரணை இரவு 8.30 மணி வரை நடந்தது. இதையடுத்து வெளியே வந்த டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். வருகிற 2-ந்தேதியும் (நாளை) விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறையினர் சம்மன் கொடுத்துள்ளனர். அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராவேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com