தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஒட்டன்சத்திரத்தில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. வாக்குறுதி

தி.மு.க. ஆட்சி அமைந்ததும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என்று அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஒட்டன்சத்திரத்தில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. வாக்குறுதி
Published on

ஒட்டன்சத்திரம்,

ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க. வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி மீண்டும் போட்டியிடுகிறார். இவர் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி பகுதியில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:-

கடந்த 5 முறை என்னை வெற்றிபெற வைத்ததற்கு முதலில் உங்களுக்கு நன்றிகள் பல தெரிவித்து கொள்கிறேன். தற்போது 6&வது முறையாக தி.மு.க. சார்பில் மீண்டும் நான் போட்டியிடுகிறேன். இந்த முறையும் எனக்கு வாக்களித்து வெற்றியை தேடித் தாருங்கள். கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஒட்டன்சத்திரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே10 கிலோமீட்டர் தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. உழவர் பேரங்காடி அமைத்தது, ஒட்டன்சத்திரத்தை நகராட்சியாக தரம் உயர்த்தியது, மகளிர் சுயஉதவி குழுக்களை ஏற்படுத்தியது என மக்களுக்கான நலத்திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றினேன்.

பாதாள சாக்கடை திட்டம்

மேலும் பழனி சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. அதேபோல் ஒட்டன்சத்திரம் சின்னகுளத்தை ரூ.7 கோடியில் தூர்வாரி பூங்கா அமைக்க அனுமதி பெற்றது என சொல்லிக் கொண்டே போகலாம். ஆகவே இந்த முறையும் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றவுடன் ஒட்டன்சத்திரத்தில் அரசு கலைக்கல்லூரி. மார்க்கெட்டிற்கு குளிர்சாதன கிடங்கு, தனி குப்பைக்கிடங்கு, நீண்டநாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டம், வேலைவாய்ப்புகளை மேம்படுத்த தொழிற்பேட்டை, பரப்பலாறு அணையை தூர்வாருதல் ஆகிய திட்டங்கள் கட்டாயம் நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளிக்கிறேன்.

அதோடு தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளான கொரோனா நிவாரணம், பெண்களுக்கு டவுன் பஸ்சில் இலவச பயணம், மாதாந்திர உதவித்தொகை என மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தி.மு.க. வெற்றி பெற்றால்தான் நிறைவேற்ற முடியும். ஆகவே உதயசூரியனுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com