தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும்
Published on

திருச்சி,

அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பில் மகளிர் தின விழா திருச்சி எடமலைபட்டிபுதூரில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பரிசுகள் வழங்கினார்.விழாவில் கே.என்.நேரு பேசியதாவது:-

உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு உருவாக்கியவர் கருணாநிதி. சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் ஆதரவு தரும் இயக்கம் தி.மு.க. தான். தற்போது குழப்பமான நிலையில் தமிழகம் உள்ளது. முதல்-அமைச்சர் வேட்பாளருக்கு தகுதியான நபர் மு.க.ஸ்டாலின் தான். தற்போது தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணி தான் மதசார்பற்ற அணி. விரைவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்று யூகங்கள் வருகின்றன.

பெண்கள் நினைத்தால் எதையும் மாற்றலாம். தி.மு.க. ஆட்சி இருந்தால் தான் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே வரும் தேர்தலில் நீங்கள் இந்த முறை சரியான முடிவை எடுக்க வேண்டும். திருச்சி ஜெயில்கார்னர் பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்போவதாக தற்போதைய அரசு முடிவெடுத்துள்ளது. நெருக்கடி மிகுந்த அந்தப்பகுதியில் பஸ் நிலையம் அமைத்தால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகுவார்கள். அங்கு தற்போதைய அரசு பஸ் நிலையம் அமைக்காவிட்டால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஏற்கனவே திட்டமிட்டபடி வெளியூர், நகர பஸ்களும், ஆம்னி பஸ்களும் நிற்பதற்கு தனி இடவசதியுடன் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும். ரெட்டமலை கோவிலுக்கு செல்வதற்கு சாலை வசதி, பஸ் வசதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு யூஜின் அடிகளார், திருச்சி அனைத்து குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கபிலன், தி.மு.க. திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், கிராப்பட்டி பகுதி செயலாளர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மகளிர் திட்ட மாநில அளவிலான முதன்மை பயிற்றுனர் கவிதா வரவேற்றார். முடிவில் அனிதா லெட்சுமி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com