

மும்பையை தாக்கியது
டவ்தே புயல் காரணமாக மும்பை, தானே, பால்கர், ராய்காட், சிந்துதுக் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.இதில் நேற்று அதிகாலை முதல் மும்பையில் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக மதியத்திற்கு பிறகு இடைவிடாமல் நகரில் மழைகொட்டி தீர்த்தது. பலத்த காற்றும் வீசியது. மும்பையை தாக்கிய இந்த புயல் காரணமாக பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கின. தாதர் இந்து மாதா, பரேல், சயான் காந்திமார்க்கெட், அந்தேரி ஆசாத் நகர், எஸ்.வி. ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.
மரங்கள் சாய்ந்தன
இதன்காரணமாக சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல வழித்தடங்களில் பெஸ்ட் பஸ்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.இதேபோல நகரில் சுமார் 120 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதன்காரணமாக பல இடங்களில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்தன. காட்கோபரில் மின்சார ரெயில் மீது மரம் விழுந்தது.
விமான நிலையம் மூடல்
நகரில் வீசிய பேய் காற்றின் காரணமாக பாந்திரா- ஒர்லி கடல் மேம்பாலத்திலும் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. இதேபோல புயலால் நேற்று மும்பை விமான நிலையத்திலும் விமான சேவை பாதிக்கப்பட்டது.நேற்று மும்பையில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மரம் விழுந்து, வெள்ளம் தேங்கியதால் சாலை, ரெயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக விமான நிலையம் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை மூடப்பட்டு, 56 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
முதல்-மந்திரி ஆய்வு
இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாநிலத்தில் புயலுக்கு எடுக்கப்பட்ட முன்எச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்தார். இதையடுத்து மாநில அரசு வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் கடலோர மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரத்து 420 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதேபோல மும்பை, தானே மற்றும் அருகில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே புயலால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அஜித்பவார்
இதேபோல துணை முதல்-மந்திரி அஜித்பவார் மாநில தலைமைசெயலகத்தில் உள் பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று முன்எச்சரிக்கை பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் கடலோர மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து உஷாராக இருக்க உத்தரவிட்டார்.அஜித் பவார் சிந்துதுர்க், தானே, ராய்காட், மும்பை நகர், புறநகர் மற்றும் மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் ஆகியோருடன் போனில் பேசி மீட்பு, முன் எச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்தார்.