டிரைவர் வெட்டிக்கொலை: அண்ணன்- தம்பிகள் உள்பட 4 பேர் கைது

சுவாமிமலை அருகே டிரைவர் கொலை வழக்கில் அண்ணன்- தம்பிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேரை தேடி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளை திருப்பி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
டிரைவர் வெட்டிக்கொலை: அண்ணன்- தம்பிகள் உள்பட 4 பேர் கைது
Published on

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே வேளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் ஹரிஹரன்(வயது23) டிரைவர். நேற்றுமுன்தினம் மாலை சுவாமிமலை அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற ஹரிஹரனை வீட்டில் இருந்து வெளியே அழைத்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இது குறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஹரிஹரனுக்கும் அவரது நண்பர்கள் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி

ஹரிஹரனின் நண்பர்களான கும்பகோணம் பகுதியை சேர்ந்த குருநாதன் மகன்கள் அறிவழகன் (வயது30), அய்யப்பன்(32), அன்பழகன்( 29) பழவந்தான் கட்டளையை சேர்ந்த சாமிநாதன் மகன் கார்த்திக்(28) ஆகிய 4 பேரை கும்பகோணம் ரெயில் நிலையம் அருகே பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் 4 பேரும் சேர்ந்து ஹரிகரனை கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அறிவழகன், அய்யப்பன், அன்பழகன், கார்த்திக் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவசர தேவைக்காக ஹரிஹரன் வாங்கிய மோட்டார் சைக்கிளை திருப்பி கொடுத்த போது அவருக்கும் கைதானவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும் இந்த தகராறு காரணமாக ஹரிஹரன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com