கார்த்திகை தீபத்தின் போது பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை - கலெக்டர் தகவல்

கார்த்திகை தீபத்தின் போது பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
கார்த்திகை தீபத்தின் போது பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை - கலெக்டர் தகவல்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழாவும் ஒன்றாகும். கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

விழாவின் முதல் நாளான 1-ந் தேதியன்று அதிகாலை 5.30 மணி முதல் 7.05 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி 10-ந் தேதி மகா தீப தரிசனம் நடக்கிறது.

கார்த்திகை தீபத் திருவிழா குறித்த முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் உள்துறை அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி முன்னிலை வகித்தார். கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வரவேற்றார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் உள்பட வருவாய்த்துறை, பொதுபணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, வேளாண்மைத் துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை, மின்வாரியம் உள்பட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கார்த்திகை தீபத்தின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் மாதத்தில் வருகிறது. அப்போது மழை காலம் எனவே அனைத்து அதிகாரிகளை மழையை மனத்தில் வைத்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மகா தீபத்தின் போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு தனியாக டோக்கன் வழங்கப்படும்.

மேலும் மகா தீபத்திற்கு நேரடியாக நெய் வழங்க இருக்கும் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப கிரிவலப்பாதையில் 3 இடங்களில் பக்தர்களிடம் நெய் வாங்க பூத்துக்கள் அமைக்கப்படும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த ஆண்டு அருகில் உள்ள மாவட்டங்களான விழுப்புரம், காஞ்சீபுரம், வேலூர் போன்ற மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அன்னதானம் வழங்க விரும்பும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி பேசுகையில், கார்த்திகை தீபத்தின் போது பக்தர்களுக்கு போலீஸ் தரப்பில் முழு பாதுகாப்பு அளிக்கப்படும். போலீசாருக்கு அனைத்துத்துறை அதிகாரிகளும், அலுவலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் கோவிலில் 150 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. அவை அனைத்தும் செயல்பாட்டில் உள்ளதா? என்பது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கண்டறிந்து தெரிக்க வேண்டும். கோவில் வளாகத்தில் கூடுதல் கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கார்த்திகை தீபத்தின் போது போக்குவரத்து நெரிசலின்றி பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏற்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். கார் பார்க்கிங் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com