லஞ்ச புகார் எதிரொலி: கூடலூர் நகராட்சி கமிஷனர் பணியிடை நீக்கம் - ஊட்டி முன்னாள் கமிஷனர் மீதும் நடவடிக்கை

கூடலூர் நகராட்சி கமிஷனர் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.இதேபோல ஊட்டி முன்னாள் கமிஷனர் மீதும் நடவடிக்கை எடுகப்பட்டு இருக்கிறது.
லஞ்ச புகார் எதிரொலி: கூடலூர் நகராட்சி கமிஷனர் பணியிடை நீக்கம் - ஊட்டி முன்னாள் கமிஷனர் மீதும் நடவடிக்கை
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கமிஷனராக கடந்த 2016-ம் ஆண்டு சர்தார் என்பவர் பணிபுரிந்தார். அதே அலுவலகத்தில் மேலாளராக பார்வதி இருந்தார். அப்போது சித்ரா என்பவர் தனக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்கக்கோரி ஊட்டி நகராட்சியில் விண்ணப்பித்து இருந்தார். பின்னர் அந்த வேலைக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்பதாக அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் கமிஷனர் சர்தார், காஞ்சீபுரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலாளராக பணிபுரிந்த பார்வதி, கூடலூர் நகராட்சிக்கு 2-ம் நிலை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து சித்ரா அளித்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி சர்தார் பணியாற்றும் காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதே நாளில் ஊட்டியில் அரசு சேட் மகப்பேறு மருத்துவமனை அருகில், பார்வதி தங்கியிருந்த நகராட்சி குடியிருப்பிலும் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி மேற்பார்வையில் சோதனை நடந்தது. அதன்பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்தார், பார்வதி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கூடலூர் நகராட்சி கமிஷனர் பார்வதி நேற்று திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் கூடலூர் நகராட்சி நிர்வாக பணிகளை, ஊட்டி நகராட்சி கமிஷனர் நாராயணன் கூடுதல் பொறுப்பாக கவனித்து கொள்ள உத்தரவிடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தானா பேகம் கூறும்போது, கூடலூர் நகராட்சி கமிஷனர் பார்வதியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் அனுமதி கோரப்பட்டது.

எனவே விசாரணைக்கு ஒத்துழைக்க ஏதுவாக பார்வதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்றார். இந்த நிலையில் தற்போது காஞ்சீபுரம் சிறப்பு நிலை நகராட்சி கமிஷனராக பணிபுரியும் சர்தாரும் பணியிடை நீக்கம் செய்யயப்பட்டு இருக்கிறார். ஒரே நேரத்தில் 2 நகராட்சி கமிஷனர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் பொறுப்புக்கு, செயற்பொறியாளர் மகேந்திரன் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com