

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்பாடி, செங்குணம், களரம்பட்டி, புதுநடுவலூர், எளம்பலூர், நாட்டார்மங் களம், இரூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 34 கல் குவாரிகளை ஏலம் விடுவதற்கான கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கினார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பாரதிதாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ஏலம் எடுப்பதற்காக உரிய ஆவணங்களுடன் காலை முதலே கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்தனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த பெட்டியில் விண்ணப்பம் இல்லை
கல் குவாரி ஏலத்துக்குரிய விண்ணப்பத்தினை போடுவதற்காக வைக்கப்பட்ட ஒப்பந்த பெட்டியை (டெண்டர் பாக்ஸ்) அங்கு கொண்டு வந்தனர். அதில் வைக்கப்பட்டிருந்த சீலினை பிரித்து பூட்டை திறந்து பார்த்த போது அதில் விண்ணப்பம் ஏதும் இல்லை. காலியாக இருந்த பெட்டி அதிகாரிகளிடம் காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேரடி பொது ஏலம் தொடங்கியது. ஒலி பெருக்கியில் அழைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் அதிகாரிகள் முன்பு அமர்ந்து பகுதி வாரியாக ஏலம் கேட்க தொடங்கினர். அப்போது அரசு நிர்ணயித்த தொகையை கூற அதிகாரிகள் மறுத்து விட்டனர். எனினும் ரூ.25 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஏலத்தை ரூ.50 லட்சம் வரை சிலர் கேட்டதாக தெரிகிறது. அப்போதும் கூட அதிகாரிகள் பாதி கிணற்றை தான் தாண்டியுள்ளர்கள்... என சூசகமாக கூறியிருக்கின்றனர். இதனால் அரசு எதிர்பார்க்கிற விலை கட்டுப்படியாகாது என தெரிவித்து விட்டு ஏலம் எடுக்க வந்தவர்கள் பின்வாங்கினர்.
பதற்றமான சூழல்
இதற்கிடையே வெளியே நின்றிருந்த நபர்கள் யார் முதலில் உள்ளே செல்வது? என்பதில் அவர்களுக் கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியது. அதன் பின் நேரம் செல்ல செல்ல சில இடங்களிலுள்ள கல் குவாரிகளை ஏலம் கேட்கவே யாரும் முன் வரவில்லை. நீண்ட நேரம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஏலம் மாலையில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் ஏலம் குறித்த புள்ளிவிவரங்களை சேகரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
ரூ.1 கோடிக்கு மேல் கேட்டால்...
ஒரு கல் குவாரியை ஏலம் எடுத்தால் 5 ஆண்டுகள் வரை அதிலிருந்து சிறு கனிமங்களான கற்களை வெட்டி எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், அரசு எதிர்பார்க்கிற ஏலத்தொகை எவ்வளவு என்பதை அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிக்க மறுத்துவிட்டனர். எனினும் ரூ.1 கோடிக்கு மேல் கேட்டால் தான் கல்குவாரி ஏலம் கிடைக்கும் என அவர்கள் சூசகமாக தொகையை வெளிப்படுத்தியதை காண முடிந்தது என ஏலம் எடுக்க வந்தவர்களில் சிலர் தெரிவித்தனர்.