போலி சான்றிதழ் கொடுத்து மனு தாக்கல்: கிராம மக்கள் சாலைமறியல்

போலி சான்றிதழ் கொடுத்து மனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்யாததை கண்டித்து கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலி சான்றிதழ் கொடுத்து மனு தாக்கல்: கிராம மக்கள் சாலைமறியல்
Published on

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது அயர்னபள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பழங்குடியினத்தவர்கள் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 6 பேர் போலியாக சான்றிதழ் தயாரித்து பழங்குடியினர் என வேட்பு மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த 6 பேரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இருந்த போதிலும் அந்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

சாலைமறியல்

இந்தநிலையில் நேற்று காலை 5 மணியளவில் அயர்னபள்ளியை சேர்ந்த கிராம மக்கள் நல்லாரளப்பள்ளி அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் போலி சான்றிதழ் கொடுத்து மனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்யாததை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி தாசில்தார் ரெஜினா, வருவாய் ஆய்வாளர் மங்கையர்கரசி, கிராம நிர்வாக அலுவலர் லட்சுமணன் மற்றும் ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சாலை மறியல் 8 மணி வரை நடந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com