பூக்கடை பகுதியில் நகைக்கடையில் தீ விபத்து; மின்கசிவு காரணமா?

சென்னை பூக்கடை பகுதியில் உள்ள நகைக்கடையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கு மின்கசிவு காராணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூக்கடை பகுதியில் நகைக்கடையில் தீ விபத்து; மின்கசிவு காரணமா?
Published on

நகைக்கடையில் தீ

சென்னை பூக்கடை என்.எஸ்.சி.போஸ் சாலையில் தனியார் நகைக்கடை செயல்பட்டு வந்தது. நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் நகைக்கடையில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். வாடிக்கையாளர்களும் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். மதியம் திடீரென அந்த நகைக்கடையில் மட்டும் மின்சார தடை ஏற்பட்டது. இதையடுத்து நகைக்கடையின் ஊழியர்கள் கடையில் சிறிது பழுது பார்த்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென அந்த நகைக்கடையில் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் மளமளவென கடை முழுவதும் தீ பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு கடையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். கடை முழுவதும் பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. கடைக்கு வெளியேயும் தீ பரவியது. நகைக்கடையில் தீப்பிடித்து எரியும் காட்சியை அந்த பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள பலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர்.

மின்கசிவு காரணமா?

இதுபற்றி தீயணைப்புத்துறை கட்டுப்பாட்டு அறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஐகோர்ட்டு, வண்ணாரப்பேட்டை, தலைமைச்செயலகம் மற்றும் ராயபுரம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நகைக்கடையில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். எனினும் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் வெல்டிங் செய்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். ஆனால் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கடை நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. எனவே தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இணை இயக்குனர் ஆய்வு

தீவிபத்து ஏற்பட்ட இடத்தை தியணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீ விபத்து குறித்து மதியம் 2 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக 4 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு வந்தன. அப்போது தீயின் வேகம் அதிகமாகவே இருந்தது. நகைக்கடைக்கு மேல் ஊழியர்கள் தங்கும் இடம் மற்றும் கேண்டீனில்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு பின்னர்தான் தெரியும்.தற்போது தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட நகைக்கடையின் அருகில் இருந்த சாலையோர கடையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விரைவாக தகவல் கிடைத்ததால், மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com