குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு பணி வழங்க கோரி வழக்கு - அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு பணி வழங்க கோரிய வழக்கில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு பணி வழங்க கோரி வழக்கு - அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

விருதுநகரை சேர்ந்த நடராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப்-4 பிரிவில் 9 ஆயிரத்து 351 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வது தொடர்பாக 2017-ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்து தேர்வின் அடிப்படையில் நபர்களை தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பார்கள். அதன் பின்னர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். இந்த தேர்வில் நான் வெற்றி பெற்றேன். இதனடிப்படையில் கடந்த ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டேன். அப்போது காலி இடம் ஏற்படும் போது எங்களை நியமிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால் தற்போது இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு என்னை போன்றவர்களை கொண்டு நிரப்பாமல் அதனையும் காலி பணியிடங்களாக அறிவித்துள்ளனர். எனவே கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கும் வரை கடந்த ஆண்டு நடந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர், தமிழக வருவாய்த்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com