

மும்பை,
மராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்தநிலையில் நிலங்கேகருக்கு சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் புனேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இவருக்கு வயது 89.
லாத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நிலங்கேகர் 1985-ம் ஆண்டு முதல் 1986-ம் ஆண்டு வரை மராட்டிய முதல்-மந்திரியாக பதவி விகித்தவர்.
பேரனிடம் தோல்வி
நிலங்கேகர் 1991-ம் ஆண்டு மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார். 1962-ம் ஆண்டு முதல் நிலங்கா தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வாகி வந்த அவர் 2014-ம் ஆண்டு அவரது பேரனான சம்பாஜி பாட்டீல் நிலங்கேகரிடம் (பா.ஜனதா) தோல்வியை தழுவினார்.
1985-ம் ஆண்டில் நடந்த எம்.டி.தேர்வு முறைகேடு தொடர்பாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் ஐகோர்ட்டு இவர் மீது கடும் கண்டனம் தெரிவித்தை அடுத்து தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலங்கேகர் மரணத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட், துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.