வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கூறினார்.
வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு
Published on

திருவாரூர்,

மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் கீழ் உஜ்வலா தினம் நாளை(வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அன்றையதினம் சமையல் எரிவாயு இல்லாதவர்களுக்கு புதிய இணைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது. இது குறித்து திருவாரூரில் சமையல் எரிவாயு வினியோகஸ்தர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன கியாஸ் விற்பனை பிரிவு முதன்மை மேலாளர் ராஜரத்தினம் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டம் குறித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலவச எரிவாயு இணைப்பு

தமிழகத்தில் விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சமையல் எரிவாயு இணைப்புகள் சராசரியாக 65 சதவீதம் என்பதை விட குறைவாக இருந்து வருகிறது. இந்த மாவட்டங்களில் போதிய அளவு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் உஜ்வலா திட்டத்தின்கீழ் வருகிற 20-ந் தேதி ஒவ்வொரு வினியோகஸ்தர்கள் மூலம் 100 புதிய சமையல் எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 18 வினியோகஸ்தர்கள் மூலம் புதிய இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. மேலும் புகையில்லா கிராமங்கள் என்ற திட்டத்தின்கீழ் திருவாரூர் மாவட்டத்தில் 156 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் 127 கிராமங்களிலும், இந்துஸ்தான் பெட்ரோலியம் மூலம் 11 கிராமங்களிலும், பாரத் பெட்ரோலியம் மூலம் 18 கிராமங்களிலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com