

தாம்பரம்,
காஞ்சீபுரம் ராகவேந்தர் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் ரூபேஷ்குமார்(வயது 14). சென்னை தாம்பரத்தை அடுத்த மேடவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு காரியம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சீனிவாசன் தனது மனைவி மற்றும் மகனுடன் சென்னை வந்தார்.
காரியம் முடிந்து நேற்று மாலை தாம்பரத்தில் இருந்து காஞ்சீபுரம் செல்ல தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்துக்கு 3 பேரும் வந்தனர். பஸ்சில் ஏறும் போது கூட்டமாக இருந்ததால் கணவன்-மனைவி இருவரும் ஏறிவிட்டனர்.
உடனடியாக பஸ் புறப்பட்டு சென்று விட்டது. ஆனால் ரூபேஷ்குமாருக்கு தனது பெற்றோர் எந்த பஸ்சில் ஏறினர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அவன், பஸ் நிலையத்தில் தனியாக நின்று பரிதவித்தான்.
அப்போது பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் மற்றொரு அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டது. அதில் தனது பெற்றோர் ஏறி இருக்கலாம் என்று நினைத்த ரூபேஸ்குமார், பஸ்சின் முன்படிக்கட்டில் ஏறினான்.
அப்போது அவன் நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டான். அவனது தலை மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவன், தலை நசுங்கி பரிதாபமாக இறந்தான்.
இதை பார்த்து பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அலறினர். இதற்கிடையில் பஸ்சில் தங்கள் மகன் ஏறாததை அறிந்த சீனிவாசன், தனது மனைவியுடன் பாதி வழியில் பஸ்சை விட்டு இறங்கி அரைமணி நேரம் கழித்து மகனை காணவில்லை என தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்துக்கு தேடி வந்தார்.
பஸ் நிலையத்தில் இருப்பவர்களிடம் தனது மகன் மாயமானது குறித்து விசாரித்துக்கொண்டிருக்கும் போது, அங்கு தலை நசுங்கி இறந்து கிடப்பது தங்கள் மகன் ரூபேஷ்குமார் என்பதை கண்டு கணவன்-மனைவி இருவரும் கதறி துடித்தனர். போலீசார் அவர்களை ஆசுவாசப்படுத்தி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் பஸ் நிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த பெருங்களத்தூர், காமராஜர் நகர், விஜயலட்சுமி தெருவைச் சேர்ந்தவர்கள் தமிழ்செல்வன்(23), விஜயகுமார்(25). உறவினர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் பைபாஸ் சாலையில் பெருங்களத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பெருங்களத்தூர் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். விஜயகுமார் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.