

சிவகங்கை,
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு தமிழகத்தில் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு மாநிலத்தில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் ஆன்லைன் மருந்து வணிக சட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. வரிவதிப்பு மற்றும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக ஓட்டல் மற்றும் மருந்துக்கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் ஓட்டல் மற்றும் மருந்து வணிகர்கள் கடைகளை அடைத்த போராட்டம் நடத்தினர்.
இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 400 ஓட்டல்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட மருந்துக்கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் வாங்க முடியாமல் அவதியடைந்தனர்.
போராட்டம் காரணமாக சிவகங்கை நகரில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அவசர கால தேவைகளுக்கு மருந்து, மாத்திரகைள் கிடைக்காமல் நோயாளிகள் பெரிதும் அவதியடைந்தனர். இதேபோல் நகரில் உள்ள ஓட்டல்கள் மற்றும் மெஸ்கள் அடைக்கப்பட்டன. சிவகங்கையில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேக்கரி உரிமையாளர்களும் தங்களது கடைகளை அடைத்தனர்.
மாவட்டத்தில் சுற்றுலா தலமாக விளங்கும் காரைக்குடியில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல்வேறு ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. இதனால் காரைக்குடிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர் மற்றும் பயணிகள் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்தனர்.
இதேபோல் திருப்பத்தூர், மானாமதுரை, தேவகோட்டை போன்ற பகுதிகளிலும் ஓட்டல்கள், மருந்துக்கடைகள் அடைப்பட்டிருந்தன. ஆனால் சிறு ஓட்டல்கள் திறந்து இருந்தன.