உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம்

நவிமும்பை சான்பாடா ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று நள்ளிரவு 1.15 மணி அளவில் மின்சார ரெயிலில் சென்ற பயணி ஒருவர் பிளாட்பாரத்தில் தவறி விழுந்தார்.
உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
Published on

மும்பை,

ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்த ரெயில்வே போலீஸ்காரர் பணி இடைநீக்கமும், ஊர்க்காவல்படை வீரர் பணிநீக்கமும் செய்யப்பட்டனர்.

நவிமும்பை சான்பாடா ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று நள்ளிரவு 1.15 மணி அளவில் பன்வெல் நோக்கி சென்றுகொண்டிருந்த மின்சார ரெயிலில் சென்ற பயணி ஒருவர் திடீரென பிளாட்பாரத்தில் தவறி விழுந்தார். இதில், அப்பயணி காயமடைந்து உயிருக்கு போராடினார். அப்போது, அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் அந்த பயணியை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மேலும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பயணியை 2 பேரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். இந்தநிலையில் அந்த வழியாக வந்த மற்றொரு பன்வெல் செல்லும் ரெயிலில் அந்த பயணியை போட்டு அனுப்பினர்.

இந்தநிலையில் மறுநாள் மதியம் பன்வெல் ரெயிலை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளி பயணி ஒருவர் பெட்டிக்குள் படுகாயங்களுடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து வந்த ரெயில்வே போலீசார் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

இதில், அந்த பயணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ரெயில்வே போலீஸ்காரர் மற்றும் ஊர்க்காவல் படை வீரரின் மனிதாபிமானமற்ற செயல் ரெயில்நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அம்பலமாகியது. இந்தநிலையில் இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் பணியில் அலட்சியமாக இருந்த ரெயில்வே போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஊர்க்காவல் படை வீரர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com