

நொய்யல்,
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே நாடார்புரத்தைச் சேர்ந்தவர் மணி என்ற கோபால் (வயது 64). இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இதில் ஒரு மகன் வெல்டிங் பட்டறையிலும், மற்றொரு மகன் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காகவும் வேலை பார்த்து வருகின்றனர்.
கோபால் விவசாயம் மற்றும் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் நொய்யலில் உள்ள ஈ.வே.ரா. அரசு மேல் நிலைப்பள்ளியில் பயின்று பின்னர் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் உள்ள கந்தசாமி கவுண்டர் கல்லூரியில் பி.காம் வரை படித்துள்ளார். தற்போது, அவர் விவசாயம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி தேங்காய் உரிப்பது, மீன் பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறார். கடந்த 1998-ம் ஆண்டு இவரது கண்விழிகளுக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பார்வையை இழந்தார். இதனால் எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
விவசாய பணிகள்
இருப்பினும், யாரையும் எதிர்பார்க்காமல், ஒரு ஊன்றுகோலை மட்டும் வைத்துக்கொண்டு தோட்டத்திற்கு விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சியும், மீன் பிடிக்கவும் தனியாக சென்று வருகிறார். தேங்காய் உரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். யாருடைய உதவி இன்றியும் தன்கையில் உள்ள ஊன்றுகோலை மட்டுமே பயன் படுத்தி எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறார். இவருடைய பணிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு வியப்பாக உள்ளது. கண் இரண்டும் தெரியாத நிலையிலும், சோர்வடையாமல், வேதனைப்படாமல் தொடர்ந்து தனது பணிகளைச் செய்து வரும் இவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.