பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் ‘ஹெல்மெட்’

பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் ஹெல்மெட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள், சார்ஜாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள். இந்த ஹெல்மெட் அதிர்வலைகளை ஏற்படுத்தி பார்வையற்றவர்கள் தடுமாற்றமின்றி நடமாட வழிகாட்டுகிறது.
பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் ‘ஹெல்மெட்’
Published on

குச்சியை ஊன்றியபடி எதிரே தென்படுபவைகளை பயத்துடன் எதிர்கொண்டு தயக்கத்துடன் நடந்து செல்பவர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு வரப்பிரசாதமாகவும் அமைந்திருக்கிறது. குச்சிக்கு மாற்றாக இந்த ஹெல்மெட்டை அணிந்து கொண்டால் போதும். மற்றவர்களை போல சர்வ சாதாரணமாக நடமாடலாம். எதிரே எந்த பொருள் தென்பட்டாலும் ஹெல்மெட் அதிர்வலைகளை ஏற் படுத்தி உஷார் படுத்திவிடும். இந்த கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்கள் லக்சன், பிரார்த்திக், ஸ்டீவ் ஆகிய மூன்று மாணவர்கள். சார்ஜாவிலுள்ள லீடர்ஸ் பிரைவேட் பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்களுள் லக்சன், பிரார்த்திக் ஆகிய இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஸ்டீவ்வின் பூர்வீகம் கேரள மாநிலம்.

பார்வையற்றவர்களுக்கு உதவும் நோக்கில் அதிர்வலை ஹெல்மெட்டை உருவாக்கியதன் பின்னணியை அவர்கள் சொல்ல கேட்போம்.

நாங்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று திரும்புவோம். ஒருமுறை நண்பன் ஒருவன் வீட்டிற்கு சென்றிருந்தோம். அவன் வீட்டுக்கு அருகில் பார்வையற்ற ஒருவர் வசித்து வருகிறார். அவர் கையில் குச்சியை ஊன்றிக்கொண்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து சிரமப்பட்டு நடந்து செல்வதை பார்க்க பரிதாபமாக இருந்தது. இவரை போன்றவர்களுக்கு நாம் ஏன் உதவிட முடியாது? என்ற எண்ணம் தோன்றியது. சிரமமின்றி நடமாடுவதற்கு உபயோகமானதாக நம்முடைய கண்டுபிடிப்பு அமைய வேண்டும் என்று ஆலோசித்தோம். இறுதியில் பார்வையற்றவருக்கு உதவும் வகையிலான அதிர்வை ஏற்படுத்தும் தொப்பியை உருவாக்க முடிவு செய்தோம் என்பவர்கள் அதனை ஹெல்மெட்டாக தயாரித்த விதத்தை விவரித்தார்கள்.

முதல் கட்டமாக ஒரு பிளாஸ்டிக் ஹெல்மெட் கொண்டு தயாரித்தோம். ஹெல்மெட், வைபிரேட்டர், மைக்ரோ பிராசசர், சர்க்யூட் போர்டு எனப்படும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை, சென்னைக்கு விடுமுறைக்கு வந்திருந்தபோது தேடிப்பிடித்து வாங்கினோம். அதற்கு எங்களது குடும்ப நண்பர்கள் பலர் உதவினர். இரண்டு வாரங்களில் ஹெல்மெட்டுக்கு முழுவடிவம் கொடுத்துவிட்டோம். அது செயல்படுவதற்கான கோடிங்குகளை உருவாக்கும் பணிதான் சிரமமானதாக அமைந்தது. எங்கள் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் எங்களை உற்சாகமாக செயல்பட வைத்தது. இதனை தயாரிக்க 150 அமீரக திர்ஹம்கள் மட்டுமே செலவானது என் கிறார்கள்.

இந்த ஹெல்மெட்டை பார்வையற்றவர்களுக்கு அணிவித்து அவர்கள் சுதந்திரமாக உலா வருவதற்கும் அடித்தளம் அமைத்துவிட்டார்கள்.

ஹெல்மெட்டை தயாரித்ததும் பார்வையிழந்த ஒருவருக்கு அணிவித்து சோதனை செய்தோம். இந்த ஹெல்மெட்டை அணிந்து செல்லும்போது அருகில் ஏதாவது பொருட்கள், சுவர் உள்ளிட்ட எது இருந்தாலும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். உடனே சுதாரித்து கொண்டு சரியான திசையில் செல்ல உதவியாக இருக்கும். ஹெல்மெட்டை அணிந்தவர் சிரமமின்றி நடந்து சென்று வந்தார். அப்போது அவரும், அவரை பார்த்து நாங்களும் அடைந்த மகிழ்ச்சி அளவிடமுடியாதது. அது சிறந்தமுறையில் வேலை செய்து வருவதை பார்த்து மன நிறைவு அடைந்தோம். முதல் முயற்சியிலேயே எங்களுக்கு சிறப்பான வெற்றி கிடைத்துள்ளது என்று மனம் பூரிக்கிறார்கள்.

இந்த மாணவர்களின் முயற்சிக்கு கண்பார்வையற்றவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குச்சியை விட இந்த அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஹெல்மெட் சிறப்பாக இருக்கிறது என்கிறார்கள்.

இந்த ஹெல்மெட்டை கண்பார்வை தெரியாதவர்கள் மட்டுமல்லாது கட்டுமான பணிகள் நடை பெறும் இடத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்களும் பயன்படுத்தலாம். கட்டுமான பணிகளின்போது தங்களை அறியாமல் நேரும் ஆபத்துகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவியாக இருக்கும். இதன் மூலம் வேலை நடைபெறும் இடங்களில் விபத்துகள் நடப்பது பெருமளவு தவிர்க்கப்படும் என்கிறார்கள், மாணவர்கள்.

இந்த ஹெல்மெட்டுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்து கொண்டிருக்கிறது. கண்காட்சிகளிலும் காட்சிப் படுத்துகிறார்கள்.

சமீபத்தில் துபாயில் உள்ள பிட்ஸ் பிலானி உயர் கல்வி நிறுவனத்தில் நடந்த அறிவியல் கண்காட்சியில் இந்த ஹெல்மெட்டை காட்சிப்படுத்தினோம். இதனை பார்வையிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலர் பாராட்டு தெரிவித்தனர். அமீரகத்தில் கண்டுபிடிப்பு மாதத்தையொட்டி சார்ஜா அரசு கோளரங்கத்தில் அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில் பங்கேற்ற இந்திய மாணவர்கள் நாங்கள் மூவர் மட்டும்தான். அங்கு வந்த அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினார்கள். எங்களுடைய கண்டுபிடிப்புக்கு பள்ளிகூடத்தின் முதல்வர் ரபியா ஜாபர் அலி, தலைமை ஆசிரியை சாரதா, வகுப்பு ஆசிரியை அசித்தா உள்பட ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளித்ததுடன் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார்கள். அடுத்தகட்டமாக இதைவிட இலகுவான ஹெல்மெட்டுகளாக உருவாக்க இருக்கிறோம். சமூகசேவை அடிப்படையில் முதல்கட்டமாக எங்களது சேமிப்பில் இருந்து 15 ஹெல்மெட்டுகளை தயாரித்து கண்பார்வை தெரியாதவர்களுக்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம் என்கிறார்கள்.

இளம் வயதில் பார்வையற்றவர்களுக்காக புதிய கண்டு பிடிப்பை மேற்கொண்டதுடன் அதனை இலவசமாக வழங்க இருக்கும் மாணவர்களின் செயல் பாராட்டுக்குரியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com