விடுமுறை எதிரொலி: சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள் - பஸ்களில் அலைமோதிய கூட்டம்

கொரோனா வைரஸ் காரணமாக பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதன் காரணமாக பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
விடுமுறை எதிரொலி: சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள் - பஸ்களில் அலைமோதிய கூட்டம்
Published on

திருப்பூர்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாவட்டமான திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டது.

இதனால் வருகிற 31-ந் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் மூடப்படுகிறது. தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகிறார்கள்.

ரெயில் சேவை நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று மாலையில் இருந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள். சில நிறுவனங்களில் இரவு வரை ஆடை தயாரிப்பு நடந்ததால், தொழிலாளர்கள் நேற்று காலை சென்றார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததால், புதிய பஸ் மற்றும் பழைய பஸ் நிலையங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.

இதனால் பஸ் நிலையங்கள் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வந்த சில பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. பஸ்களுக்காக பெண்கள் உள்பட பலரும் நீண்ட நேரமாக பஸ் நிலையங்களில் காத்திருந்தனர்.

இதன் பின்னர் வந்த பஸ்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். பஸ்களில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள் முகக்கவசம் அணிந்தபடி சென்றார்கள். இதுபோல் திருப்பூர் மாவட்டத்தின் அருகில் உள்ள கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பலரும் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளிலேயே சென்றார்கள்.

இந்த நிலையில் பஸ்கள் குறைவாக இயக்கப்பட்ட நிலையில், தனியார் வாகனங்கள் பஸ் நிலையங்களில் ஆங்காங்கே நின்று நெல்லை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு தொழிலாளர்களை அழைத்து சென்றனர். இந்த வாகனங்களிலும் ஏராளமானவர்கள் சென்றார்கள்.

மேலும், ஒரு வாரம் 144 தடை உத்தரவு என்பதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக அனைத்து கடைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைவரும் ஒருவருக்கொருவர் முண்டியடித்தபடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றார்கள்.

திருப்பூர் கோர்ட்டு ரோட்டில் உள்ள போலீஸ் கேண்டீனில் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. அத்தியாவசிய பொருட்களின் விற்பனையும் அதிகமாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com