சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம் - வட்டார போக்குவரத்து அலுவலர் பேச்சு

சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் பேசினார்.
சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம் - வட்டார போக்குவரத்து அலுவலர் பேச்சு
Published on

சீர்காழி,

சீர்காழியில், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம், மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் ஆகியன சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு மயிலாடுதுறை ரோட்டரி சங்க தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். விவேகானந்தா மற்றும் குட்சமாரிட்டன் கல்வி குழுமங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன், தேசிய பயிற்சியாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகரசிங் வரவேற்றார்.

இதில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுதல், செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஆட்களை ஏற்றி செல்லுதல் போன்றவை தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் இதுவரை 560 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கையால் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன. சாலை விதிகளை முறையாக பின்பற்றி கடைபிடித்தால் விபத்துகளை முற்றிலும் தவிர்க்கலாம் என்றார்.

விபத்தில்லாமல் 10 ஆண்டுகள் பள்ளி வாகனத்தை இயக்கி வரும் டிரைவர்களுக்கும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே நடத்திய பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சீர்காழி ராம்குமார், மயிலாடுதுறை சண்முகவேல், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போக்குவரத்து சாலை விதிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.

இதற்கான ஏற்பாடுகளை திட்ட இயக்குனர் முருகேசன் மற்றும் விவேகானந்தா கல்வி நிறுவனம் செய்திருந்தது. முடிவில் துணை முதல்வர் சரோஜா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com