அனைத்து கிராமங்களின் முன்னேற்றத்திற்கும் நடவடிக்கை கலபுரகியில், குமாரசாமி பேட்டி

கர்நாடகத்தில் அனைத்து கிராமங்களின் முன்னேற்றத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
அனைத்து கிராமங்களின் முன்னேற்றத்திற்கும் நடவடிக்கை கலபுரகியில், குமாரசாமி பேட்டி
Published on

கலபுரகி,

முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பீதருக்கு செல்லும் வழியில் கலபுரகியில் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வேலையில்லா திண்டாட்டம்

ஐதராபாத்-கர்நாடக பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில அரசு கல்வி, சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு காண மாநில அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயலாற்றி வருகிறது.

இந்த பகுதியில் அரசு பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கப்படும். புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்படும். ஆசிரியர் பணி காலியிடங்கள் நிரப்பப்படும். இதுகுறித்து அடுத்த 10 நாட்களில் கல்வித்துறை அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி முடிவு எடுக்கப்படும்.

ரூ.500 கோடி நிதி

இந்த பகுதியில் தரமான கல்வி கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கலபுரகி மாவட்டம் ஹெரூர் கிராமத்தில் கடந்த 22-ந் தேதி கிராம தரிசன நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. மழையால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

அந்த பகுதியின் மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நான் தங்கும் கிராமங்கள் மட்டுமின்றி அனைத்து கிராமங் களின் முன்னேற்றத்திற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிராம தரிசனம் மூலம் அரசு எந்திரத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை 2 கிராமங்களில் கிராம தரிசனம் நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

ஆலோசனை

முன்னதாக கலபுரகி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அந்த மாவட்ட பொறுப்பு மந்திரி பிரியங்க் கார்கேயுடன் குமாரசாமி சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இதில் கலபுரகி மண்டல கமிஷனர், மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com