பாளையங்கோட்டையில் பழக்கடை வைப்பதில் தகராறு: வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; தந்தை-மகன்கள் கைது

பாளையங்கோட்டையில் பழக்கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில், வியாபாரியை ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிய தந்தை-மகன்களை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டையில் பழக்கடை வைப்பதில் தகராறு: வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; தந்தை-மகன்கள் கைது
Published on

நெல்லை,

பாளையங்கோட்டை- திருச்செந்தூர் ரோடு பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் முன்பு ஆங்காங்கே தற்காலிக இளநீர் கடைகள், பழக்கடைகள் இருந்தன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கையொட்டி, அங்கு ஏராளமான திடீர் கடைகள் முளைத்தன. காய்கறி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டன. அங்கு கடை வைப்பது தொடர்பாக வியாபாரிகளுக்கு இடையே தொழில் போட்டியும் நிலவி வந்தது.

அங்கு பாளையங்கோட்டை அருகே உள்ள கொங்கந்தான்பாறையை சேர்ந்த மாடசாமி (வயது 58), அவருடைய மகன்கள் மாசானம் (33), பேச்சிமுத்து (31) ஆகிய 3 பேரும் மினி வேன் மூலம் பழ வியாபாரம் செய்து வந்தனர்.

இதற்கிடையே அங்கு பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த ஜேம்ஸ் (வயது 29) என்பவரும் தள்ளுவண்டியில் பழம் வியாபாரம் செய்தார். இதனால் அவர்களுக்கு இடையே தொழில் போட்டியால் தகராறு ஏற்பட்டுவந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மாடசாமி, மாசானம், பேச்சிமுத்து ஆகிய 3 பேரும் சேர்ந்து ஜேம்சை ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ஜேம்ஸ் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த ஜேம்சை மீட்டு சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்த மாடசாமி, மாசானம், பேச்சிமுத்து ஆகிய 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து தனியார் பள்ளிக்கூடம் முன்பு சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளை அகற்றுமாறு போலீசார் உத்தரவிட்டனர். தொடர்ந்து வியாபாரிகள் தங்களது கடைகளை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com