

பெங்களூரு,
கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், தனியார் மருத்துவமனைகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசால் பரிந்துரை செய்யப்படும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்கப்படுகிறது.
ஆயுஸ்தான்-ஆரோக்கிய கர்நாடக காப்பீட்டு திட்டத்தை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக்கொள்ள தேசிய சுகாதார ஆணையம் அனுமதி அளித்துள்ளது. உடல் கவச உடைகள் உள்பட ஒரு முறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருட்களுக்கு அரசே கட்டணம் நிர்ணயிக்கும்படியும் அந்த ஆணையம் கூறியுள்ளது.
செயல்படை குழு
இந்த கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக கர்நாடக அரசின் சுவர்ண ஆரோக்கிய சுரக்ஷா அறக்கட்டளையின் செயல் இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு பொது வார்டு, எச்.டி.யூ. (ஹை டிபன்டென்சி யூனிட்) வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு, செயற்கை சுவாச கருவியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகளில் சிகிச்சை அளிக்க கட்டணம் நிர்ணயிக்குமாறு அந்த குழுவை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த குழு, தனியார் மருத்துவமனை சங்க நிர்வாகிகள், தனியார் மருத்துவமனை நிர்வாகங்களுடன் ஆலோசனை நடத்தி, கட்டணத்தை நிர்ணயித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. கொரோனாவை தடுக்க அமைக்கப்பட்டுள்ள செயல்படை குழு கூட்டத்தில் கடந்த 18-ந் தேதி இந்த அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டது.
ரூ.10 ஆயிரம்
அந்த குழு வழங்கிய அறிக்கையில் கூறப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி கர்நாடக அரசு பரிந்துரை செய்யும் கொரோனா நோயாளிகளுக்கு கீழ்கண்ட முறையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது, அரசின் பொது சுகாதாரத்துறை பரிந்துரை செய்யும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கியுள்ளவற்றில் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும். இதில் எச்.டி.யூ., ஐ.சி.யூ. படுக்கைகளும் அடங்கும்.
மீதமுள்ள 50 சதவீத படுக்கைகளை மருத்துவமனைகளில் நேரடியாக வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். பொது சுகாதாரத்துறை பரிந்துரை செய்யும் கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் பொது வார்டில் ஒருவருக்கு தினசரி கட்டணம் ரூ.5,200, எச்.டி.யூ. வார்டில் ரூ.7,000, தீவிர சிகிச்சை பிரிவு வார்டில்(தனி) ரூ.8,500, செயற்கை சுவாச கருவியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவில்(தனி) சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்க வேண்டும்.
தீவிர சிகிச்சை பிரிவு
அரசின் அனுமதியுடன் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வரும் கொரோனா நோயாளிகளுக்கு தனி வார்டில் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம், எச்.டி.யூ. வார்டில் ரூ.12 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில்(தனி) ரூ.15 ஆயிரம், செயற்கை சுவாச கருவியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவில் ரூ.25 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த கட்டணம், காப்பீட்டு திட்டத்தில் உள்ளவர்களுக்கோ அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கும், பிற தனியார் நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் செய்திருந்தால் பொருந்தாது. அரசின் பரிந்துரை இல்லாமல், அனுமதியுடன் வரும் கொரோனா நோயாளிகளிடம் ஒரே அறையில் 2 பேர் சிகிச்சை பெற்றால், அவர்களிடம் கூடுதலாக 10 சதவீதமும், ஒரு அறையில் ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்றால் அவர்களிடம் கூடுதலாக 25 சதவீதமும் கட்டணம் பெற்றுக்கொள்ளலாம்.
நடவடிக்கை எடுக்கப்படும்
கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை முறைகள் மற்றும் டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பாக மாநில அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் வழிகாட்டுதலை தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளோருக்கான ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என அனைத்து கொரோனா நோயாளிகளும் இந்த திட்டத்தில் தகுதியானவர்கள்.
கொரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதில் சமரசத்திற்கு இடம் அளிக்கக்கூடாது. சுவர்ண ஆரோக்கிய சுரக்ஷ அறக்கட்டளை தான், இந்த திட்டத்தின் கண்காணிப்பு அமைப்பாக செயல்படுகிறது. அரசின் இந்த உத்தரவை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது பேரிடர் நிர்வாக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.