ராசிபுரத்தில் பேன்சி ஸ்டோர், வீட்டில் பதுக்கிய ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல் - வியாபாரி கைது

பேன்சி ஸ்டோர், வீட்டில் பதுக்கி வைத்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்து வியாபாரியை கைது செய்தனர்.
ராசிபுரத்தில் பேன்சி ஸ்டோர், வீட்டில் பதுக்கிய ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல் - வியாபாரி கைது
Published on

ராசிபுரம்,

ராசிபுரத்தில் பேன்சி ஸ்டோர், வீட்டில் பதுக்கி வைத்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்து வியாபாரியை கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின் பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் மேற்பார்வையில் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் ராசிபுரம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்காணித்து வந்தனர்.

நேற்று அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராசிபுரம் டவுன் சின்னக்கடைவீதியில் பல்வன்சிங் (வயது 38) என்பவர் நடத்தி வந்த பேன்சி ஸ்டோரை சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் சென்ற போலீசார் திடீர் சோதனையிட்டனர். அப்போது அந்த கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து தியாகராஜா சாமி கோவில் தெருவில் உள்ள பல்வன்சிங் குடியிருக்கும் வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவர் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 6 ஆயிரத்து 587 குட்கா பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் கொண்ட 162 பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

குட்கா பொருட்களை விற்றதாக பல்வன்சிங்கை போலீசார் கைது செய்தனர். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் பாபிரா ஆகும். அங்கிருந்து 8 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்துள்ளார். அப்போது அவர் சேலம் செவ்வாய்பேட்டையில் டீக்கடை வைத்து நடத்தினார். அதன்பின்னர் கடந்த 6 ஆண்டுகளாக ராசிபுரம் சின்னக்கடைவீதியில் பேன்சி ஸ்டோரை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராசிபுரம் சினனக்கடைவீதியில் உள்ள பேன்சி ஸ்டோரில் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் வியாபாரிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்ட பல்வன்சிங் ராசிபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com