நில மோசடி விவகாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் கைது

தர்மபுரியில் நில மோசடி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு சென்ற போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நில மோசடி விவகாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் கைது
Published on

தர்மபுரி,

தர்மபுரியை சேர்ந்தவர் ராஜாராம். இவருடைய மனைவி தேன்மொழி (வயது 30). இவர்கள் தர்மபுரியில் மிக்சி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்கள். தர்மபுரி நியூகாலனி பகுதியை சேர்ந்தவர் மாது (52). போலீஸ்காரராக பணிபுரிந்த அவர் துறைரீதியான நடவடிக்கைக்கு உள்ளாகி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் தன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி தேன்மொழியிடம் அறிமுகப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நிலம் வாங்கி தருவதாக கூறி மாது நிலத்தை காண்பித்து உள்ளார். அதற்காக 3 தவணைகளில் தேன்மொழியிடம் ரூ.17 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகவும், அதன்பின் அவர் நிலத்தை கிரயம் செய்து வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பணம் செலுத்திய தேன்மொழி நிலத்தை கிரயம் செய்து தருமாறு மாதுவின் வீட்டிற்கு நேரில் சென்று பலமுறை கேட்டுள்ளார். அப்போது மாது, அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோர் நிலத்தை கிரயம் செய்து தர முடியாது என்று கூறி தேன்மொழி மற்றும் அவருடைய கணவருக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக தேன்மொழி தர்மபுரி டவுன் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த மோசடி புகார் தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் மாது வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் மாதுவை போலீசார் கைது செய்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மாது அங்கும் போலீசாரிடமும் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com