சரக்கு சேவை வரி வரம்புக்குள் பெட்ரோல்-டீசல் விலையை கொண்டு வர வேண்டும்

சரக்கு சேவை வரி வரம்புக்குள் பெட்ரோல்-டீசல் விலையை கொண்டு வர வேண்டும் என்று தி.மு.க. வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சரக்கு சேவை வரி வரம்புக்குள் பெட்ரோல்-டீசல் விலையை கொண்டு வர வேண்டும்
Published on

சென்னை,

தி.மு.க. வர்த்தகர் அணி மாநில நிர்வாகிகள்- மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு கட்சியின் வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ம.கிரகாம்பெல், துணை செயலாளர்கள் பி.டி.பாண்டிச்செல்வம், வி.பி.மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* ஜூன் 1-ந்தேதி திருவாரூரில் நடைபெறும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் கூட்டத்துக்கு வர்த்தகர் அணியினர் கலந்துகொள்ள வேண்டும்.

* பாக்கெட்டுகளில் விற்கப்படும் அரிசிக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை மத்திய அரசு நீக்க வேண்டும்.

* பிளாஸ்டிக் பை 50 மைக்ரானுக்கு குறைவா? அல்லது கூடுதலா? என்று வணிகர்களுக்கு தெரியாது. எனவே பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யப்படும் ஆலைகளிலேயே தடுத்து அபராதம் விதித்திட வேண்டும்.

* வணிகர்களின் தனி நபர் வருமான வரி வரம்பில் அதிகபட்ச வரி ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீத வரி என்பதற்கு பதில் 10 சதவீதம் என்றும், ரூ.30 லட்சத்துக்கு மேல் 20 சதவீதம் என்றும், ரூ.1 கோடிக்கு மேல் 30 சதவீதம் என்றும் மாற்றி அமைத்தால், வணிகர்கள் பலரும் வரி செலுத்திட முன் வருவர்.

* வரலாறு காணாத வகையில் பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது இந்தநிலை மாறிட பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிப்பொருட்களை சரக்கு சேவை வரி வரம்புக்குள் மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.

* கருணாநிதி அமைத்து தந்த வணிகர் நல வாரியத்தை மீண்டும் அமைத்து, அதில் அனைத்துக் கட்சியினரும் பங்குபெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சரக்கு சேவை வரி விதிப்பில் இ-வே பில் எனும் புதிய விதிமுறையில் தொலைதூரம் 10 கி.மீ.என்பதை 100 கி.மீ.என மாற்றிடவும், இ-வே பில்லுக்கான உச்சவரம்பு தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாக தளர்த்தி மத்திய அரசு அறிவித்திட வேண்டும்.

* ஆன்-லைன் வர்த்தகம் மூலம் தமிழகத்தில் நுழைய உள்ள வால்மார்ட் நிறுவனத்தை தடுக்கும் வகையில் தகுந்த சட்டம் இயற்றி வணிகர்களை தமிழக அரசு காத்திட வேண்டும்.

* தூத்துக்குடி கலவரத்தை தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க. அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்.

* கர்நாடக முதல்-மந்திரி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளாது தூத்துக்குடி மக்களின் துயரத்தில் பங்கு பெற சென்ற தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை இக்கூட்டம் மனதார பாராட்டுகிறது.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com