முதுமலையில், பசுமாட்டை அடித்து கொன்ற புலி - பொதுமக்கள் பீதி

முதுமலையில் பசுமாட்டை புலி அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
முதுமலையில், பசுமாட்டை அடித்து கொன்ற புலி - பொதுமக்கள் பீதி
Published on

கூடலூர்,

கூடலூர் மற்றும் முதுமலை வனப்பகுதியில் காட்டுயானை, புலி, மான், கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தைப்புலி, செந்நாய் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கோடை வறட்சியால் வனப்பகுதியில் பசுந்தீவனம், தண்ணீர் தட்டுப்பாட்டால் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன. முதுமலை கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் இரவில் மான்கள், காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.

இதேபோல் சிறுத்தைப்புலிகளும் ஊருக்குள் வந்து கால்நடைகளை கடித்து கொன்று வருகின்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் நஷ்டத்துக்கு ஆளாகி வருகின்றனர். வழக்கமாக காட்டுயானைகள், சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். புலிகள் மிக அபூர்வமாகவே தென்படும். இந்த நிலையில் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட முதுமலை ஊராட்சி புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ளது. இங்கு காட்டுயானைகள் தாக்கி பலர் உயிரிழந்து உள்ளனர். மேலும் புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் தாக்கி ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளை இழந்துள்ளனர்.

முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட புலியாளம் கிராமத்தில் வசிப்பவர் குட்டன் செட்டி. இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தனது வீட்டில் சில பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை 5 மணிக்கு வீட்டின் அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்த பசுமாடுகளின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் வீட்டை விட்டு குட்டன் செட்டி வெளியே ஓடி வந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் புலி ஒன்று கொட்டகையில் இருந்து அருகிலுள்ள வனப்பகுதிக்குள் பாய்ந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் கொட்டகைக்குள் சென்று பார்த்தார். அப்போது சுமார் 6 வயதான பசுமாடு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தது. கொட்டகைக்குள் புகுந்து பசுமாட்டை புலி அடித்து கொன்றது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் அங்கு இருட்டாக இருந்தது. இந்த சமயத்தில் வனப்பகுதிக்குள் சென்ற புலியின் உறுமல் சத்தம் தொடர்ந்து கேட்டவாறு இருந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முதுமலை வனத்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயி குட்டன்செட்டி கூறும்போது, தினமும் 20 லிட்டர் பால் கறக்கக்கூடிய பசுமாட்டை புலி அடித்து கொன்று விட்டது. இதனால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே உரிய இழப்பீடு தொகை தர வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் பதிலளித்தனர். பின்னர் கிராம மக்கள் கூறும்போது, புலி அருகிலுள்ள வனப்பகுதியில் தொடர்ந்து உறுமியவாறு சுற்றித்திரிகிறது.

இதனால் கால்நடைகளை அடித்து கொல்ல அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அதை கண்காணித்து விரட்ட வேண்டும் என்றனர். தொடர்ந்து அப்பகுதியில் கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com