ஒகி புயலில் இறந்து கேரளாவில் கரை ஒதுங்கிய மேலும் ஒரு குமரி மீனவரின் உடல் அடையாளம் தெரிந்தது

ஒகி புயலில் இறந்து கேரளாவில் கரை ஒதுங்கிய மேலும் ஒரு குமரி மீனவரின் உடல் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் தெரிந்தது.
ஒகி புயலில் இறந்து கேரளாவில் கரை ஒதுங்கிய மேலும் ஒரு குமரி மீனவரின் உடல் அடையாளம் தெரிந்தது
Published on

நித்திரவிளை,

குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியதில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமானார்கள். புயல் தாக்கி ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் பல மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. புயலில் இறந்த பல மீனவர்களின் உடல்கள் கேரளாவில் கரை ஒதுங்கின. அவை திருவனந்தபுரம், கொச்சி, வேப்பூர் பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் மாயமான குமரி மீனவர்களின் உடல்கள் இருக்கிறதா? என்பதை கண்டு பிடிக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்த உடல்கள் அனைத்தும் அழுகிய நிலையில் இருப்பதால் அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, டி.என்.ஏ. என்ற மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு வருகிறது. இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சில மீனவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில், குமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த ஜோசபாத் என்பவரின் உடல் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜோசபாத்துக்கு விஜயா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இதுபோல் நாகப்பட்டினம், தரங்கம்பாடியைச் சேர்ந்த சஞ்சிகண்ணு என்ற மீனவரின் உடலும் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து அவரது உடலும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சஞ்சிகண்ணு உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர்.

இன்னும் கேரள அரசு ஆஸ்பத்திரிகளில் அடையாளம் காணமுடியாத நிலையில் பலரது உடல்கள் உள்ளன. அவற்றை அடையாளம் காண உறவினர்கள் மூலம் டி.என்.ஏ. பரிசோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com