

ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ஐ.ஐ.டி. காலனியில் உள்ள சாந்தி நகர் பாரதி தெருவை சேர்ந்தவர் காஜா நிஜாமுதீன் (வயது 38). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல ஆடை நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இவர் தனக்கு சொந்தமான காரில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்கரணை சாந்தி நகர் வ.உ.சி. தெருவில் சாலையோரம் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் திடீரென கார் மோதி நின்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காரில் இருந்து இறங்கி பார்த்தார். பின்னர் மீண்டும் காரில் ஏறிய காஜா நிஜாமுதீன், டிரான்ஸ்பர்மரில் சிக்கி கொண்ட காரை வெளியே எடுக்க முயன்ற போது, கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மள,மளவென பற்றி எரிந்ததால், காரில் இருந்த அவர் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கினார்.
இதையடுத்து, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் சத்தம் போட்டார். இந்த நிலையில் அருகில் யாரும் இல்லாத நிலையில், உயிருக்கு போராடிய நிலையில், தீயில் கருகி காஜா நிஜாமுதீன் பலியானார். இது பற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ், மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அப்போது, காரில் கருகிய நிலையில் கிடந்த காஜா நிஜாமுதீனை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.