விருத்தாசலத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது பற்றி ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு

விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து ரெயில் பயணிகளிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விருத்தாசலத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது பற்றி ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு
Published on

விருத்தாசலம்,

ரெயிலில் பயணம் செய்பவர்கள் பாதுகாப்புடன் பயணம் செய்யும் வகையில், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட ரெயில்வே போலீசாருக்கு ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் ஆகியோரது அறிவுறுத்தலின் பேரில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில், இருப்பு பாதை போலீசார் சார்பில் ரெயில் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். இதில் விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் மற்றும் அந்த வழியாக ரெயிலில் பயணம் செய்த பயணிகளிடம் போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

அதில், மாற்றுத் திறனாளிகளுக்கான ரெயில் பெட்டிகளில் அவர்களை தவிர வேறு யாரும் ஏறி பயணம் செய்யக் கூடாது, ரெயில் பயணத்தின் போது அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் உணவு பொருட்களை உண்ணவோ, குளிர்பானங்களை அருந்தவோ கூடாது, பெண்கள் தங்க நகைகளை அணிந்து பயணம் செய்யும்போது மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், குறிப்பாக ஜன்னல் ஓர இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை வெளியே தெரியும் படி அணிந்திருக்க கூடாது. அப்போது தான் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

மேலும் ஓடும் ரெயிலில் ஏறுவதோ, இறங்குவதோ கூடாது. தூங்கும் நேரங்களில் ஜன்னல் கதவுகளை மூடிக்கொண்டு பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும், பயணத்தின்போது உடைமைகள் மீதும் கவனமாக இருக்க வேண்டும். ரெயிலின் படிக்கட்டு அருகில் நின்று பயணம் செய்வது, செல்போன் பேசுவது ஆபத்தானது. செல்போன் பேசியபடி தண்டவாள பாதையை கடந்து செல்லக்கூடாது. ரெயில்வே கேட்டை கடக்கும்போது இருபுறமும் கவனித்து பாதுகாப்பாக கடந்து செல்ல வேண்டும். ரெயில் பயணத்தின்போது அவசர உதவிக்கும், சந்தேக நபர்களை பார்த்தாலும் 1512 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று பல்வேறு விழிப்புணர்வுகளை வாசங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் இது தொடர்பாக ஒலி பெருக்கி மூலமாகவும், போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முடிவில் தனிப் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் நாதன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com