விருத்தாசலத்தில் சாலையோரத்தில் கொட்டப்பட்ட காலாவதியான குளிர்பான பாக்கெட்டுகள்

விருத்தாசலத்தில் சாலையோரத்தில் காலா வதியான குளிர்பான பாக்கெட்டுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
விருத்தாசலத்தில் சாலையோரத்தில் கொட்டப்பட்ட காலாவதியான குளிர்பான பாக்கெட்டுகள்
Published on

விருத்தாசலம்,

விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் ராஜகோபாலசாமி கோவில் அருகில் சாலையோரத்தில் உள்ள காலிமனையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காலாவதியான குளிர்பான பாக்கெட்டுகள் கொட்டப்பட்டது. இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக மர்மநபர்கள் நள்ளிரவில் வாகனத்தில் வந்து காலாவதியான குளிர்பான பாக்கெட்டுகளை கொட்டிச்செல்கின்றனர்.

குவிந்து கிடக்கும் குளிர்பான பாக்கெட்டுகளை, அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் எடுத்து குடிக்க முயன்றனர். இதை பார்த்த அப்பகுதியில் வசிப்பவர்கள், அந்த பாக்கெட்டுகளை பிடுங்கி, சிறுவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த காலாவதியான குளிர்பானத்தை குடித்தால் உயிர் சேதம் ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளதால், காலையிலும், மாலையிலும் அந்த இடத்தில் இளைஞர்கள் சிலர் காவல் காத்து வருகிறார்கள்.

பல பாக்கெட்டுகள் உடைந்து துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி குப்பை அள்ளும் தொழிலாளர்களிடம் தெரிவித்தனர். ஆனால் குளிர்பான பாக்கெட்டுகள் தனிநபருக்கு சொந்தமான இடத்தில் கிடப்பதால் நாங்கள் அவற்றை அள்ளி செல்ல மாட்டோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

மேலும் இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

எனவே நள்ளிரவில் காலாவதியான குளிர்பான பாக்கெட்டுகளை கொட்டுவது யார்? என்பதை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். கொட்டப்பட்டுள்ள காலாவதியான குளிர்பான பாக்கெட்டுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும், வரும் காலங் களில் காலாவதியான பொருட்களை திறந்தவெளியில் கொட்டுவதை தடுக்க வேண்டும், அவற்றை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com