புள்ளம்பாடியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்

புள்ளம்பாடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.
புள்ளம்பாடியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்
Published on

கல்லக்குடி,

புள்ளம்பாடியில் குழுந்தாளம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கிராம முக்கியஸ்தர்கள் ஏற்பாட்டின்பேரில், புள்ளம்பாடி ஏரிக்கரை பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்க அரியலூர், பெரம்பலூர், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 625-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. 381 மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர்.

திருச்சி மண்டல கால்நடை இணை இயக்குனர் முருகன் தலைமையில் கால்நடை மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்தனர். டாக்டர் செல்வநாயகம் தலைமையிலான மருத்துவ குழுவினர் வீரர்களை பரிசோதனை செய்தனர். இதில் அனைத்து காளைகள் மற்றும் வீரர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

லால்குடி கோட்டாட்சியர் பாலாஜி ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் பல காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சென்றன. சில காளைகள் பிடிக்க வந்த வீரர்களை முட்டித்தூக்கி வீசி பந்தாடிவிட்டு சென்றன.

காளைகள் முட்டியதில் 15 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், குளிர்பதன பெட்டி, சோபா, பாத்திரங்கள், செல்போன் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு, லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) கோடிலிங்கம் தலைமையில் 7 இன்ஸ்பெக்டர்கள், 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புள்ளம்பாடி, வெங்கடாசலபுரம், விரகாலூர், ஆலம்பாக்கம், அரியலூர், கல்லக்குடி, திருமானூர், லால்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு கமிட்டி பொறுப்பாளர்கள், இளைஞர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com