ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 12 பேர் காயம்

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 12 பேர் காயம்
Published on

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டையை அடுத்த கந்தர்வகோட்டை தச்சங்குறிச்சியில் புனித அடைக்கலமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை பெற்று நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை முதல், உரிமையாளர்கள் தங்களுடைய காளைகளை லாரிகள், டிராக்டர், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் தச்சங்குறிச்சிக்கு கொண்டு வந்தனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ் ஆகியோர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடிக்கவில்லை. பின்னர் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 450 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்க முயன்றனர்.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு ரொக்கப்பரிசு உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நாளை மறுநாள் (17-ந்தேதி) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான முன்பதிவு நேற்று நடந்தது. அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த காளைகள் பதிவு முகாமில், மாட்டின் உரிமையாளர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டைகள் முறையாக ஸ்கேன் எடுக்கப்பட்டு, பின்னர் வழங்கப்பட்டது. காலையில் தொடங்கி மாலை வரை இந்த டோக்கன் வழங்கும் முறை நடந்தது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். காளைகளுக்கு ஏற்கனவே மருத்துவ பரிசோதனை முடிந்து அனுமதி பெற்றவர்கள் காளையின் போட்டோவை மட்டும் கொண்டு வந்திருந்தனர். சிலர் மட்டும் காளையுடன் வந்திருந்தனர். மொத்தம் 1,400 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com