

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையும், கிருஷ்ணகிரி அருகே கே.ஆர்.பி. அணையும் கட்டப்பட்டுள்ளது. 1957-ம் ஆண்டு நவம்பர் மாதம் கே.ஆர்.பி. அணை கட்டுமான பணிகள் முடிந்து திறக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு ரூ.1.10 கோடி மதிப்பில் இந்த அணையின் 8 மதகுகள் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 3 மாதங்களாக கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாகவும் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 52 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 51 அடியாக இருந்த நிலையில், நேற்று அணைக்கு வினாடிக்கு 316 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
கடந்த சில மாதங்களாக கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 51 அடியாக இருந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் எதிர்பாராத வகையில், கிருஷ்ணகிரி அணையின் பிரதான முதல் மதகு நீர்அழுத்தம் காரணமாக உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ் மற்றும் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அந்த நேரம் அணையின் பிரதான மதகில் இருந்து தண்ணீர் அதிக அளவில் தொடர்ந்து வெளியேறி கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக அருகில் இருந்த 5-வது மதகில் வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மொத்தம் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடிக்கும் மேல் கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. ஏற்கனவே கிருஷ்ணகிரி அணையில் இருந்து, அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
நேற்றுடன் தொடர்ந்து 102 நாட்களாக 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில், தற்போது வினாடிக்கு 6 ஆயிரம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால், தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டோரா மூலமாகவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறி வருவதால், பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர், காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பேரிடர் மேலாண்மை குழுவினர் கிருஷ்ணகிரி அணைக்கு விரைந்துள்ளனர். கிருஷ்ணகிரி அணையில் 51 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளதாலும், தண்ணீர் தொடர்ந்து அணைக்கு வந்த வண்ணம் இருப்பதாலும், உடைந்த மதகை சரி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மதகை சரி செய்ய சில நாட்கள் ஆகும் என தெரிகிறது.
கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகு உடைந்துள்ளதால் மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.