வலங்கைமானில் மணல் இல்லாமல் மண் தரையாக காட்சி அளிக்கும் குடமுருட்டி ஆறு

வலங்கைமானில் குடமுருட்டி ஆறு மணல் இல்லாமல் மண் தரையாக காட்சி அளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வலங்கைமானில் மணல் இல்லாமல் மண் தரையாக காட்சி அளிக்கும் குடமுருட்டி ஆறு
Published on

வலங்கைமான்,

கல்லணையில் இருந்து காவிரி, புதுஆறு, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. இதில் காவிரியில் இருந்து பிரியும் கிளை ஆறுகளில் ஒன்று குடமுருட்டி. தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளையும், திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளையும் வளப்படுத்துகிறது குடமுருட்டி ஆறு. பல்வேறு கிராமங்களில் முக்கிய பாசன ஆறாக பயன்பட்டு வரும் குடமுருட்டி முடிவில் வங்க கடலில் கலக்கிறது.

குடமுருட்டியில் தண்ணீர் முழு அளவில் வந்தால் முப்போக நெல் சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ளலாம் என விவசாயிகள் கூறுகிறார்கள்.

மணல் இல்லாத ஆறு

இந்த ஆற்றில் நிலத்தடி நீரை உறிஞ்சி சேமிக்கும் வகையில் 5 அடிக்கும் உயரமாக மணல் நிரம்பி இருந்தது. ஆற்றின் வளத்தை பாதுகாக்கும் அம்சமாக மணல் விளங்கியது. கனிம வளங்களில் ஒன்றாக போற்றப்படும் மணல் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து சுரண்டப்பட்டு வந்ததன் விளைவாக வலங்கைமானில் குடமுருட்டி ஆற்றின் தரை பகுதியில் தற்போது மணல் மேடுகளுக்கு பதிலாக மண் மேடுபோல காட்சி அளிக்கிறது.

இதன் காரணமாக ஆற்றின் தண்ணீர் உறிஞ்சும் தன்மை குறைந்து விட்டதாகவும், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் என்றும் இயற்கை ஆர்வலர்களும், விவசாயிகளும் வேதனை தெரிவிக்கின்றனர்.

மணல் கொள்ளை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குடமுருட்டி ஆற்றில் பல ஆண்டுகளாக சேமிக்கப்பட்டு இருந்த மணல் தற்போது இல்லை. இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் நிலத்தடி நீர் கேள்விக்குறியாகி விடும். ஆற்றின் தன்மையை பாதுகாக்கும் விதமாக மணல் கொள்ளையை இரும்பு கரம் கொண்டு தடுக்க அரசு முன்வர வேண்டும். ஆற்றின் இருபுறமும் கரைகளில் மணல் அள்ள பயன்படுத்தப்படும் வாகனவழித் தடங்களில் தடை ஏற்படுத்த வேண்டும். கரைகளில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் நீண்ட ஆயுட்கால மரக்கன்றுகளை நட வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com