

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான அப்துல் ரஹீம் (வயது 21) முககவசம் அணியாமல் வந்ததாக கூறி ஏற்பட்ட மோதலில் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று, விடிய விடிய தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீமா, கொடுங்கையூர் போலீஸ்காரர் உத்தரகுமார் உள்பட 9 போலீஸ்காரர்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 15 நாட்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆர்.டி.ஓ.வுக்கு சென்னை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று மதியம் தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலக வளாகத்தில் சென்னை வடக்கு மண்டல கோட்டாட்சியர் கண்ணப்பன், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீஸ்காரர்களிடமும் விசாரணை நடத்தினார். அப்போது போலீசார் அளித்த விளக்கங்கள், வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. மேலும் தாக்குதலுக்கு ஆளான மாணவர் அப்துல் ரஹீம் மற்றும் அவரது நண்பரிடமும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.