ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்ய கண்காணிப்பு குழுவிடம் வேட்பாளர்கள் அனுமதி பெற வேண்டும் கலெக்டர் தகவல்

தேர்தலையொட்டி ஊடகங்களில் விளம்பரம் மூலம் பிரசாரம் செய்ய கண்காணிப்பு குழுவிடம் வேட்பாளர்கள் அனுமதி பெற வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்ய கண்காணிப்பு குழுவிடம் வேட்பாளர்கள் அனுமதி பெற வேண்டும் கலெக்டர் தகவல்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கேபிள் டி.வி., தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் செய்வது தொடர்பாக சான்றிதழ் பெறும்பொருட்டு மாவட்ட அளவில் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் பேசியதாவது:-

ஊடகங்களில் விளம்பரம் மூலம் பிரசாரம் செய்ய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் விளம்பரம் செய்வதற்கு 3 தினங்களுக்கு முன்பாகவும், அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர்கள் மற்றும் இதர வேட்பாளர்கள் 7 தினங்களுக்கு முன்பாகவும் விண்ணப்பிக்க வேண்டும். இவர்கள் விண்ணப்பம் செய்து கொண்ட நாளில் இருந்து 2 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.

விளம்பரம் செய்யப்பட உள்ள விளம்பரபடத்தின் மின்னணு வடிவில் தமிழாக்கம் செய்யப்பட்ட 2 நகல்கள் மற்றும் விளம்பரம் தயார் செய்வதற்கு ஏற்பட்ட தொகை விவரம், தொலைக்காட்சி சேனல் மற்றும் கேபிள் ஒளிபரப்பு ஆகியவற்றில் விளம்பரம் செய்வதற்கான நேரம், கட்டணத்தின் வகைப்பாடு வாரியாக தெரிவிக்க வேண்டும்.

வாக்குப்பதிவு தினம் மற்றும் அதற்கு முந்தைய தினம் ஆகிய நாட்களில் மட்டுமே பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டுமானால் இக்குழுவின் அனுமதி பெற வேண்டும். தொலைக்காட்சி, கேபிள் டி.வி. மூலமாக வேட்பாளர்களின் அனுமதி பெறாமல் செய்யப்படும் விளம்பரங்கள் இக்குழுவினருக்கு தெரியவரும் பட்சத்தில் மேற்படி ஒளிபரப்பு நிறுவனங்களின் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேர்தல் தொடர்பாக வினியோகிக்கப்படும் துண்டுபிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளில் அச்சகத்தின் பெயர், முகவரி மற்றும் பிரசுரங்களின் எண்ணிக்கை ஆகியவை அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 127-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக ஊடகங்கள் மூலமாக வரப்பெறும் புகார்களையும் இக்குழு விசாரணை மேற்கொண்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோருக்கு அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரம் உள்ளது.

இக்குழுவின் உத்தரவாதமானது திருப்திகரமாக இல்லையெனில் மாநில அளவில் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் மேல்முறையீடு செய்து கொள்ள வழிவகை உள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com