மேட்டூர் அணை நீர்மட்டம் 120.40 அடியாக உயர்வு: 75 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 120.40 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 120.40 அடியாக உயர்வு: 75 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
Published on

மேட்டூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன நீர்ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. அணையின் மொத்த உயரம் 124 அடி என்றாலும், 120 அடி வரை தான் அணையில் தண்ணீர் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. இந்த அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

நேற்று முன்தினம் மேட்டூர் அணை நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அப்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 68 ஆயிரத்து 489 கனஅடியாக இருந்தது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர், பாசனம் மற்றும் உபரிநீராக திறந்து விடப்பட்டது. பின்னர் இந்த தண்ணீர் திறப்பு அன்று இரவு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

இதில் நீர்மின்நிலைய பாதையில் வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 56 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 1,000-ம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 75 ஆயிரத்து 170 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 120.40 அடியாக உயர்ந்தது. அணை நீர்மட்டம் 120 அடி என்ற அளவில் நிலைநிறுத்த வசதியாக அணைக்கு வரும் நீரை அப்படியே திறந்துவிட பொதுப்பணித்துறையினர் முடிவு செய்திருந்தனர்.

இதன்படி நேற்று காலை முதல் அணையில் இருந்து வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதில் நீர்மின்நிலையம் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி நீரும், உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக கால்வாய் பாசனத்துக்கும் மற்றும் உபரி நீரையும் சேர்த்து வினாடிக்கு 52 ஆயிரத்து 500 கனஅடியும் திறந்து விடப்படுகிறது.

தொடர்ந்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி என்ற அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் அனல்மின்நிலையம் அருகே மீண்டும் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இந்த பகுதியில் தண்ணீர் வெளியேறும் பகுதியையொட்டி, ஒரு சிலர் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருவதால், தண்ணீர் செல்லும் பாதையை ஒட்டி பயிர் செய்யப்பட்டுள்ள பருத்தி, வாழை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வருகின்றன. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், மேட்டூர் அணை தண்ணீர் நிறைந்து கடல் போல் பிரமாண்டமாக காட்சி அளிப்பதையும், 16 கண் பாலம் பகுதியில் தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையும் காண கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. நேற்றும் மேட்டூர் அணை, பூங்கா பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com