நாகர்கோவிலில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நாகர்கோவிலில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
Published on

நாகர்கோவில்,

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைப்பதோடு, ரூ.13.07 கோடி மதிப்பிலான 28 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார். ரூ.31 கோடியே 34 லட்சம் மதிப்பில் பல்வேறு துறைகளின் மூலம் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார். தொடர்ந்து 14 ஆயிரத்து 911 பேருக்கு ரூ.67 கோடியே 27 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேரூரையாற்றுகிறார்.

விழாவுக்கு சட்டசபை சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், விஐயகுமார் எம்.பி. ஆகியோர் பேசுகின்றனர்.

விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசுகிறார். குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நன்றி கூறுகிறார்.

விழா நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக மேடை கோட்டை வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் முகப்பு பகுதியில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வண்ண புகைப்படங்கள் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன. பந்தலின் முன்பக்க பகுதிகள் மற்றும் நுழைவு வாயில்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது புகைப்படங்கள், மற்றும் கட்- அவுட்கள், பறக்கும் குதிரையின் வண்ணப்படம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

பந்தலில் விழா மேடைக்கு முன்புறம் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நபர்கள், பரிசு பெறும் மாணவ- மாணவிகள், நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள், பொதுமக்கள் ஆகியோர் அமருவதற்கு தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பந்தலின் வெளியே செய்தித்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அரங்கில் தமிழக அரசின் சாதனைத்திட்டங்கள், எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்படக் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதேபோல் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, நாகர்கோவில் நகராட்சி, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அ.தி.மு.க.வினர் தடபுடலான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் விழாவைப்பற்றிய சுவர் விளம்பரங்களை அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்துள்ளனர். மேலும் விழா நடைபெறும் கல்லூரி வளாகம் மற்றும் நாகர்கோவில் நகரப்பகுதி உள்ளிட்ட மாவட்டப்பகுதிகள், முதல்-அமைச்சர் எடப்பாடி வந்து செல்லும் பாதைகள் அனைத்திலும் முதல்-அமைச்சரை வரவேற்று வண்ண, வண்ண வரவேற்பு பேனர்கள் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் கொடி தோரணங்கள், வரவேற்பு வளைவுகள், பதாகைகளாலும் நாகர்கோவில் நகரை அ.தி.மு.க.வினர் அலங்கரித்துள்ளனர். இதனால் நாகர்கோவில் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

விழாவையொட்டி கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் மேற்பார்வையில் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா பந்தல் மற்றும் மேடை, முதல்-அமைச்சர் வந்து செல்லும் பாதைகள், முதல்-அமைச்சர் தங்கியிருக்கும் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை ஆகியவற்றை போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com