

சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டூர் நாட்டில் உள்ள தேனூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்புராஜ் (வயது40). தொழிலாளியான இவருக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரோஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்பு காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து அன்புராஜும், ரோஜாவும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 4 வயதில் சவுந்திரராஜன் என்ற மகனும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பிறந்த பெண் குழந்தையும் இருந்தனர். இந்தநிலையில் அன்புராஜ்-ரோஜாவுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர் அன்புராஜ் அன்னாசிபழ விற்பனைக்காக வீட்டில் இருந்து சோளக்காடு வார சந்தைக்கு சென்றுவிட்டார்.
இந்தநிலையில் குடும்ப தகராறில் மனம் உடைந்த ரோஜா திடீரென்று தனது 4 வயது மகன் சவுந்திரராஜனுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்தார். இதில் இருவரும் வீட்டில் மயங்கி கிடந்தனர். நேற்று காலை தாய், மகன் இருவரும் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததை அக்கம்பக்கத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்து அன்புராஜுக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கிருந்து விரைந்து வந்து நண்பர்கள் உதவியுடன் ரோஜாவையும், சவுந்திரராஜனையும் 2 மோட்டார்சைக்கிள்கள் மூலம் குழிவளவு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரோஜாவும், சவுந்திரராஜனும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தேனூர்பட்டி முழுவதும் பரவியதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பொதுமக்கள் அன்புராஜ் வீட்டு முன்பு திரண்டார்கள். இதுபற்றி கொல்லிமலை வாழவந்திநாடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரோஜா மற்றும் சவுந்திரராஜன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சோக சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக ரோஜா வீட்டில் விஷம் குடித்த பின்னர், தனது கைக்குழந்தை அழுததால் தாய்ப்பால் ஊட்டியதாக கூறப்படுகிறது. அந்த ஒரு மாத குழந்தைக்கு ரோஜா குடித்த விஷத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்று நாமக்கல் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.