

திருவள்ளூர்,
சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். சாலை விதிகளை கடைபிடித்தால் விபத்துகள் இல்லாமல் பயணம் செய்யலாம். மனித உயிர் விலைமதிப்பற்றது. இருசக்கர வாகனங்களில் செல்லக்கூடியவர்களும், பின்னால் அமர்ந்து செல்லக்கூடியவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லும்போது போக்குவரத்து காவலர்களின் சைகைகளை கண்டு அதன்படி சாலை விதிகளை மதித்து செல்வதால் பாதுகாப்பாக பயணம் செய்யலாம்.
ஆட்டோ டிரைவர்களும் தங்கள் வாகனத்தை இயக்கும்போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். மேலும் ஆட்டோக்களை பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
உயிரிழப்புகளை தடுக்க வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை கடைபிடித்து நடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, கிருஷ்ணராஜ், ராஜேந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.