முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 129.45 அடியாக குறைந்தது

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் நீர்மட்டம் 129.45 அடியாக குறைந்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 129.45 அடியாக குறைந்தது
Published on

தேனி,

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் இந்த அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது.

கடந்த மாதம் 15-ந்தேதி அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. கேரள பகுதிக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் மழைப் பொழிவு குறைந்து நீர்வரத்தும் குறைந்ததால் உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரு வார காலமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழைப்பொழிவு எதுவும் இல்லை. அவ்வப்போது லேசான சாரல் மழையே பெய்த வண்ணம் உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 129.45 அடியாக குறைந்தது. நீர்வரத்து வினாடிக்கு 365 கன அடி என்ற அளவில் இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,867 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த நீர் இருப்பு 4 ஆயிரத்து 579 மில்லியன் கன அடியாக உள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் தற்போது முதல்போக நெல் சாகுபடி பணிகள் தான் நடந்து வருகிறது. சில இடங்களில் கதிர் பால் பிடிக்கும் அளவிலும், சில இடங்களில் தற்போது தான் நாற்றுகள் நன்கு வளர்ந்த நிலையிலும் உள்ளன. எனவே, முதல் போக சாகுபடிக்கே இன்னும் தண்ணீர் தேவை அதிகம் உள்ளது. அப்படி இருக்கையில் தற்போது உள்ள தண்ணீர் முதல் போக சாகுபடியை பூர்த்தி செய்தாலும், இரண்டாம் போக சாகுபடிக்கு வடகிழக்கு பருவமழை கைகொடுக்க வேண்டும் என்ற நிலைமை உள்ளது.

தென்மேற்கு பருவமழை போல் வடகிழக்கு பருவமழையும் கைகொடுத்தால் 2-ம் போக சாகுபடியும், வரும் கோடை கால குடிநீர் தேவைக்கும் பிரச்சினை இருக்காது. மாறாக, மழைப் பொழிவு குறைந்தால் சாகுபடி மற்றும் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com