ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 7 பேர் கைது

ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 7 பேர் கைது
Published on

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் குணா என்கிற குணசேகரன் (வயது 29). கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலை என்கிற கலைச்செல்வன் (31). நண்பர்களான இவர்கள் 2 பேர் மீதும் 15-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் உள்ளன.

கடந்த ஜனவரி மாதம் காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர்கள் 2 பேரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர். இதுதொடர்பான வழக்கு கடந்த 10-ந்தேதி ஈரோடு விரைவு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராகிவிட்டு 2 பேரும் வீடு திரும்பினர். அப்போது ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் மறைந்திருந்த ஒரு கும்பல் குணசேகரன் மற்றும் கலைச்செல்வனை கத்தியால் குத்தியும், கல்லால் தாக்கியும் படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இந்த படுகொலை குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் குணசேகரன் மற்றும் கலைச்செல்வனை கெலை செய்ததாக, வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் ராஜாஜி தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் என்கிற வேட்டை ரவி (24), ஜான்சி நகரை சேர்ந்த அழகிரி (23), அன்னை சத்யா நகரை சேர்ந்த கார்த்தி என்கிற காவலன் கார்த்தி (27), செட்டிபாளையம் கரும்பாறை இந்தியன் நகரை சேர்ந்த மதன் (26), ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், ஏற்கனவே நடந்த 2 கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 7 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குணசேகரன், கலைச்செல்வன் கெலை வழக்கில் தொடர்புடைய, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த பத்து என்கிற பத்மநாதன் (31), பர்கான் (36), வைராபாளையம் நேதாஜி வீதியை சேர்ந்த கிருஷ்ணன் (23), வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (22), அசோகபுரம் பகுதியை சேர்ந்த முரளிதரன் (25), வீரப்பன்சத்திரம் குழந்தை அம்மாள் வீதியை சேர்ந்த சிவா என்கிற கிங்சிவா (26), மரப்பாலம் ஆலமரத்து தெரு பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் என்கிற குட்டச்சாக்கு (23) ஆகிய 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டு உள்ளனரா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com